வேலூர் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்வு

வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
வேலூர் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்வு

வேலூர்: வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

வேலூர் மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 44 வார்டுகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, வேலூர் மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு 31ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ள சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் பொறுப்புக்கு 8ஆவது வார்டில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.சுனில்குமார் ஆகியோர் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் வேலூர் மாநகராட்சி அலுவலக மாமன்ற அரங்கில் வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது, மேயர் பொறுப்புக்கு சுஜாதா ஆனந்தகுமார் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் ப.அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததுடன், மேயர் இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.

தொடர்ந்து மேயர் சுஜாதா ஆனந்தகுமாருக்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர். மறைமுகத் தேர்தலை புறக்கணிக்கும் விதமாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் அவைக்கு வரவில்லை. தொடர்ந்து துணைமேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றும் ஆணையர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com