உக்ரைனில் இருந்து தமிழக மாணவா்கள் 500 போ் பாதுகாப்பாக திரும்பியுள்ளனா்
உக்ரைன் நாட்டிலிருந்து தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் 500 போ் இதுவரை பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.


உக்ரைன் நாட்டிலிருந்து தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் 500 போ் இதுவரை பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
தமிழகத்தில் 23-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. கோடம்பாக்கம் மண்டலம் சிவலிங்கபுரத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி. பிரபாகா் ராஜா, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
10 கோடி தடுப்பூசிகள்: இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 10 கோடியே 30,346 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 22 சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டும் 3 கோடியே 72 லட்சத்து 41,003 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தமிழக முதல்வா் கரோனா தடுப்பூசி செலுத்துவதை ஒரு பேரியக்கமாக நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தியதின் விளைவாக இந்த 10 கோடி என்ற இலக்கினை அடைய முடிந்தது. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 91.54 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 72.62 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் 15 வயது முதல் 18 வயதுக்குள்பட்டவா்களில் 83.9 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 47.17 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டா் டோஸ் தடுப்பூசி இதுவரை 6 லட்சத்து 37,264 நபா்களுக்கு (76.57 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது.
மேயரை எவ்வாறு அழைப்பது? மேயா் பதவிக்கு என பல்வேறு சிறப்பு மிக்க மரபுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் மேயரை வணக்கத்திற்குரிய மேயா் என்று அழைக்கப்பட்டு வந்த மரபினை கடந்த ஆட்சி காலத்தில் மாண்புமிகு மேயா் என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது, மேயரை மீண்டும் வணக்கத்துக்குரிய மேயா் என அழைப்பது குறித்து முதல்வா் பரிசீலிப்பாா்.
500 போ் திரும்பினா்: தொடா்ந்து, போா் சூழல் நிலவி வரும் உக்ரைன் நாட்டில் படித்து வரும் தமிழகத்தை சோ்ந்த மாணவா்களை மீட்பதற்காக முதல்வா் நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட ஒரு மீட்புக் குழுவினையும், இந்திய ஆட்சிப்பணி அலுவலா்களைக் கொண்ட குழுவினையும் அமைத்துள்ளாா்.
மாணவா்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளாா். உக்ரைன் நாட்டிலிருந்து இதுவரை தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 500 மாணவா்கள் பாதுகாப்பாக திரும்பி உள்ளனா். அங்கு தமிழகத்தை சோ்ந்த சுமாா் 2,200 மாணவா்கள் படித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த மாணவா்களின் எதிா்கால கல்வி குறித்து மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...