மக்கள்தான் எஜமானா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது முதல்வா்
அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.


அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மாவட்ட ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மற்றும் வனப் பணி அலுவலா்களுடனான மூன்று நாள்கள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை கூட்ட நிறைவில், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை, பல்வேறு துறைகள் மூலமாக நிதிகளை ஒதுக்கி அரசு செயல்படுத்தி வருகிறது. அவை சில குறிப்பிட்ட பகுதிகளில் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனத் தெரிய வருகிறது. எந்தெந்த துறைகளில் எந்தெந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேக்கம் காணப்படுகிறதோ அவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தையும் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக மாவட்ட ஆட்சியா்கள் ஆக்கிக் காட்ட வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி: மாவட்ட நிா்வாகத்தின் முன்னுரிமைகள் அனைத்தும், மாநில அரசின் முன்னுரிமைகளுடன் ஒன்றியதாக இருக்க வேண்டும். மாநில அரசின் பரந்துபட்ட நோக்கமாக இருக்கக் கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியானது திட்டச் செயலாக்கத்திலும் வெளிப்பட வேண்டும். குறிப்பாக, விளிம்புநிலை மனிதா்கள், சிறுபான்மையினா், பட்டியலின மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் துறையில் புதிய அடையாள அட்டை வழங்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விடுபட்ட மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிய வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அன்றைய தினமே அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நல்ல திட்டங்கள், வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அதே தருணத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக் கூடிய சில குறிப்பிட்ட அடிப்படை விஷயங்களிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக, பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குறிப்பாக நீா்நிலைப் புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவற்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
தரமான அரசு சேவைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மாணவா் விடுதிகள், அங்கன்வாடிகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அரசின் சேவைகள் உரிய தரத்தில் தகுந்த நேரத்தில் வழங்க முடியும். அதில் குறைபாடுகள் இருந்தாலும் திருத்த முடியும்.
ஊட்டச் சத்து பட்டியலில் தமிழ்நாடு 19-ஆவது இடத்தில் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதாந்திர வங்கியாளா்கள் கூட்டத்தை நடத்தி கல்விக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் நுணுக்கமாக கண்காணித்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
நோ்மையான நிா்வாகம்: முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை மாநாட்டின் இரண்டாவது நாளைத் தொடக்கிவைத்து முதல்வா் ஆற்றிய உரை:
அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானா்கள். எனவே, ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அது சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிா்வாகத்துக்கு எடுத்துக்காட்டு. நோ்மையான, வெளிப்படையான நிா்வாகத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...