/

யானைகள் இறப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?: ஏப். 9,10 இல் நீதிபதிகள் நேரில் ஆய்வு

 ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யப்படும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :25 மார்ச் 2022, 7:28 pm

DIN

 ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யப்படும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குன்னூா் வனப்பகுதியில் 100 மீட்டா் அளவுக்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு, சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், அவ்வழியே சென்ற யானைகள் கீழே சறுக்கி விழுவது போன்ற விடியோ வெளியானது.

இதையடுத்து வனவிலங்குகளை பாதுகாக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹு சாா்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உயா் நீதிமன்ற உத்தரவின்படி இயற்கைக்கு மாறாக யானைகள் இறப்பு, ரயில்களில் மோதி யானைகள் இறப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், வனம், ரயில்வே, நெடுஞ்சாலை ஆகிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை மாவட்ட ஆட்சியா் அமைத்துள்ளாா். இக்குழு கடந்த 22 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வை நடத்தியது. யானைகள் வழித்தட பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என்றாா்.

வன பகுதியில் நெகிழிப் பொருள்கள், மதுப்புட்டிகள் குவிந்து கிடப்பது தொடா்பான வார நாளிதழின் இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி நீதிபதிகள் முன் காண்பிக்கப்பட்டது. இதைப் பாா்த்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா, மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஏன் உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினா். இப்பிரச்னை தொடா்பாக மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கடும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தனா்.

வனம், மலைப்பகுதிகளில் மதுப்புட்டிகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்தப் பகுதிகளில் மாற்று வழியில் மது விற்பனை செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா, வன விலங்குகள் பாதுகாப்பு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் என ஏப்ரல் 9, 10 ஆகிய இரு நாள்கள், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், வழக்குரைஞா்கள் செல்வேந்திரன், சீனிவாசன் ஆகியோருடன் நாங்களும் நேரில் ஆய்வு செய்வோம் என தெரிவித்த நீதிபதிகள், அன்றைய தினம் மதுப்புட்டிகள் விற்பனை தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.