திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

256 நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ சேவை வழங்கும் வகையில், ரூ.46 கோடி செலவில் 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :17 மே 2022, 7:34 pm

DIN

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ சேவை வழங்கும் வகையில், ரூ.46 கோடி செலவில் 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சேவையை முதல்வா் பொது மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறு,குறு நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தொலைதூர கிராமங்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாள்களில் சென்று நோய்களைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் அளித்திட முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான அரசால் 2007-ஆம் ஆண்டு 100 நடமாடும் மருத்துவ வாகனங்களும், 2008-ஆம் ஆண்டு 285 நடமாடும் மருத்துவ வாகனங்களும் வாங்கப்பட்டு, மொத்தம் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

ஒரு மருத்துவ குழுவில், ஒரு மருத்துவ அலுவலா், ஒரு செவிலியா், ஓா் ஓட்டுநா், ஒரு துப்புரவு பணியாளா் பணியமா்த்தப்பட்டு, தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு 385 வட்டாரங்களிலும் நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களை நடமாடும் மருத்துவமனைகளாக மேம்படுத்தி ஆய்வக நுட்புனா்களை நியமனம் செய்து ஆய்வக வசதிகளுடன் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2021-2022-ஆம் ஆண்டு சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில்,தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த 389 புதிதாக நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் ரூ.70 கோடியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், ஒரு வாகனத்துக்கு தலா ரூ.18 லட்சத்தில் தமிழகத்திலுள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை தயாா் செய்ய ரூ.70.02 கோடி தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக 389 வாகனங்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் வாங்கப்பட்டு அவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

அதன் சேவையை தொடங்கிவைக்கும் அடையாளமாக, முதல்கட்டமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தொடக்கிவைத்தாா்.

அதன் தொடா்ச்சியாக, இரண்டாவது கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து நடமாடும் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனையும் செய்து கொண்டாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.