/

பெரியார் பல்கலைக் கழக தொலைநிலை படிப்புகளில் சேர வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை

பெரியார் பல்கலைக்கழகம் முன்அனுமதி பெறாமல் தொலைநிலைக்கல்வி படிப்புகளை நடத்தி வருவதால், அந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:24 am

DIN

பெரியார் பல்கலைக்கழகம் முன்அனுமதி பெறாமல் தொலைநிலைக்கல்வி படிப்புகளை நடத்தி வருவதால், அந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.
 இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிக்கை:
 முன் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி, ஆன்லைன் படிப்புகளை நடத்தி வருகிறது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைநிலைக் கல்வி படிப்புகளிலோ, ஆன்லைன் படிப்புகளிலோ சேர வேண்டாம். இதுகுறித்து விசாரித்து ஆளுநர், உயர்கல்வித் துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 துணை வேந்தர் விளக்கம்: இதனிடையே, யுஜிசி அனுமதியுடன் மட்டுமே பெரியார் பல்கலை.யில் தொலைநிலைக் கல்வி படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருவதாக அதன் துணைவேந்தர் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து பெற்றதில் அகில இந்திய அளவில் 2-ஆம் இடமும், தமிழகத்தில் முதலிடமும் பெற்ற அரசு பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெரியார் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. தேசிய அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், பெரியார் பல்கலை. திகழ்கிறது.
 பெரியார் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில், 2020 ஜனவரி மாதம் 13 படிப்புகளை ஒரேயொரு பருவத்தில் மட்டும் நடத்திக் கொள்ள யுஜிசி அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் இதுவரை ஒரு முறை மட்டுமே மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது. மேலும், இணைய வழிக் கல்வியில் 7 படிப்புகளை நடத்திக்கொள்ள பெரியார் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி 2021-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.
 யுஜிசி அனுமதி அளித்துள்ள படிப்புகள் மட்டுமே பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார் துணை வேந்தர் இரா.ஜெகநாதன்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.