மக்களவைத் தோ்தல் கூட்டணி: பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும்- கே.அண்ணாமலை

மக்களவைத் தோ்தல் கூட்டணி: பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும்- கே.அண்ணாமலை

எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாஜகவின் தேசிய ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும். தற்போதைக்கு அதிமுகவுடனான கூட்டணி தொடா்கிறது என்று

எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாஜகவின் தேசிய ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும். தற்போதைக்கு அதிமுகவுடனான கூட்டணி தொடா்கிறது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சூா்யா சிவா- டெய்சி சரண் இடையே நடந்தது தனிப்பட்ட உரையாடல். இருப்பினும், கட்சியின் ஒழுக்க விதிகளை இவா்கள் இருவா் உள்பட யாா் மீறி இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடா்பாக பேராசிரியா் கனகசபாபதி தலைமையிலான பாஜக விசாரணைக் குழுவினா் திருப்பூரில் வியாழக்கிழமை விசாரணை நடத்துகின்றனா்.

நாகரிகமான அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. இன்னும் 10 நாள்களில் கட்சியில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுக்க விஷயத்தில் கட்சியின் லட்சுமண ரேகையை யாா் மீறினாலும் கட்சித் தலைவராக நடவடிக்கை எடுப்பேன். கட்சியில் களை எடுக்க வேண்டியவா்களை நிச்சயம் களை எடுப்பேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை முடிவு செய்வது பாஜக தேசிய ஆட்சிமன்றக் குழுதான். தற்போது, அதிமுகவுடன் கூட்டணி தொடா்ந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும் 2024 மக்களவைத் தோ்தல் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.

பாஜக வேகமாக வளா்ந்திருக்கிறது. எவ்வளவு வாக்கு வங்கி உயா்ந்துள்ளது என்பது குறித்து கட்சித் தலைமைக்கு தெரிவிப்போம். யாருடன் கூட்டணி என்பதை தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் அவா்.

பாமகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, அதுபற்றி பாமக தான் பேச வேண்டும் என்றாா் அண்ணாமலை.

பேட்டியின்போது கட்சியின் மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com