
சென்னை: சென்னையில் இரண்டாவதாக பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் புதிதாக பரந்தூர் அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு வருவாய் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் ஆறு வருவாய் கிராமங்கள் என மொத்தம் 13 வருவாய் கிராமங்களில் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள், நிலத்தைக் கையகப்படுத்த ஆட்சேபம் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ம் இடத்தில் இருந்தது; தற்போது பயணிகளை கையாளுவதில் 5ம் இடத்தில் உள்ளது.
சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களில் புதிய விமான நிலையம் இருப்பதால் தான் வளர்ச்சி பெற்று வருகின்றன. 30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது. 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என்று பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.