‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்திருந்தது. இது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டது. 

இந்நிலையில் அருணா ஜெகதீசன் அறிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சட்டப்பேரவையில் பேசினார். 

அப்போது அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக அன்றைய அதிமுக அரசுதான் ஆணையம் அமைத்து விசாரணை செய்யப்படும் என அறிவித்தது. அன்றைக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது தவறான கருத்து என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

கொடூரமான கொலை தாக்குதல்களை அறையில் அமர்ந்து வர்ணனைகளாகக் கேட்டுவிட்டு வெளியில் வந்து தனக்கு எதுவும் தெரியாது என எடப்பாடி பழனிசாமி பொய் கூறியுள்ளார். இதற்கான தண்டனையை தேர்தல் மூலமாக தமிழக மக்கள் அதிமுகவிற்கு வழங்கினர். நீதியரசர் அருணா ஜெகதீசன் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபடாத 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அருணா ஜெகதீசன் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்ததுபோல் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு மேலும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com