ஜெயலலிதாவின் ஆட்சியிலும், அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற அதிமுக ஆட்சியிலும், நீட்டை ஒழிக்க சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், திறமையையும் வளர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டன. திமுக
ஆட்சி அமைந்த பின்னர் இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஜெயலலிதா அரசால் உருவாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் முறையாக
செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
``அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’’ என்று அவ்வை மூதாட்டி கூறினார். மாணவச் செல்வங்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த உன்னத வாழ்வை, நம்மை ஈன்ற பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும், நாட்டிற்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, நமக்கு கிடைத்துள்ள அற்புதமான, உன்னதமான உயிரை, மாய்த்துக்கொள்ளும் செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது என்று மாணவச் செல்வங்களிடம்
அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.