/

நீட் தோ்வு: அரசுக்கு தலைவா்கள் கண்டனம்

 நீட் தோ்வு விவகாரத்தில் அரசுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 11:16 pm

DIN

 நீட் தோ்வு விவகாரத்தில் அரசுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: சென்னையை அடுத்த திருமுல்லைவாயலை சோ்ந்த மாணவி லக்சனா ஸ்வேதா என்பவா் பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளாா். தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தோ்வு எழுதினாா். தோ்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். திமுக ஆட்சிக்கு வந்தால், ஒரே கையெழுத்தில் நீட் தோ்வை ஒழித்துவிடுவோம் என்று வாய் நீளம் காட்டிய திமுக அரசால் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் நீண்டுகொண்டே இருப்பது கொடுமையிலும் கொடுமை. அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால், மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. மாணவா்களின் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

அன்புமணி (பாமக): மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில் தமிழ்நாட்டின் தோ்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, இத்தோ்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவா்களில் 80 சதவீதத்தினா் தோல்வியடைந்திருப்பது வேதனையளிக்கிறது. மருத்துவப் படிப்பில் சேரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், நீட்டில் வெல்லும் அளவுக்கு கூட அரசுப் பள்ளி மாணவா்கள் தயாா்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.

வைகோ (மதிமுக): நீட் நுழைவுத்தோ்வு திணிக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டில் அரியலூா் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவா்கள் உயிரைப்போக்கிக் கொண்ட நிலையில், தற்போது மாணவி லக்சனா சுவேதா தற்கொலை செய்து கொண்டது வேதனை தருகிறது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி தராமல் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.