கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் தலைமையில் கடந்த, 9-ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 60-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். 210 பேர் சார்பில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில் யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தியவர்கள், குறைந்த பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கொடுக்கும் எனக்கூறியும், பிளாட், வெளிநாட்டு சுற்றுலா, ஐபோன் என கவர்ச்சி திட்டங்களை கூறி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் பெறப்பட்டதாகவும் இரண்டு வாரம் லாபம் என்ற பெயரில் சிறு தொகை கொடுத்து அதன் பின்னர் ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தனர். அவர்கள் குற்றம் சாட்டியிருந்த டிஜிட்டல் காயின் நிறுவன பங்குதாரர்களான ஒசூர், ராமகிருஷ்ணா நகர் அருண்குமார் என்பவர் நடத்தி வந்த ஏ. கே., டிரேடர்ஸ் நிறுவனம், கிருஷ்ணகிரி நந்தகுமார், பெருகோனப்பள்ளி சங்கர், பிரகாஷ், செட்டிப்பள்ளி சீனிவாசன், தருமபுரி மாவட்டங்கள், மாரண்டஅள்ளி வேலன் ஆகியோர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட எட்டு இடங்களில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.