ஆண்டு முழுவதும் குடிநீருக்கு கவலையே இல்லை: சென்னைக் குடிநீர் வாரியம்

அடுத்த ஒரு வருடத்திற்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஆண்டு முழுவதும் குடிநீருக்கு கவலையே இல்லை
ஆண்டு முழுவதும் குடிநீருக்கு கவலையே இல்லை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிவரும் ஏரிகளில் மொத்த கொள்ளளவான 13222 மில்லியன் கன அடியில் 8566 மில்லியன் கன அடி குடிநீர் இருப்பில் உள்ளது. இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான வீராணம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, புழல், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் ஆகியவற்றின் மொத்த கொள்ளளவு 13222 மில்லியன் கன அடி ஆகும். தற்போது, 8566 மில்லியன் கன அடி குடிநீர் இருப்பில் உள்ளது. இது 64.79 சதவீதமாகும். இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு சீரான குடிநீர் விநியோகம் தொடர்ந்து செய்யப்படும்.

சென்னை பெருநகர மக்களுக்கு தற்போது ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 1030 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு (மில்லியன் கன அடி) :-

பூண்டி ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நீர் வளத்துறையால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித் துறையின் நீரியல் மற்றும் நீர் நிலையியல் மையத்திற்கு நீர் வழங்குவதற்கான இரண்டு கிணற்று மதகு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கான மறு சீரமைப்பு கட்டுமானம் தற்பொழுது 50 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ளது. தற்சமயம், கிருஷ்ணா நதிநீர் திட்டத்திலிருந்து பூண்டி ஏரிக்கு நீர் வரத்து மேற்கண்ட பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன் பூண்டி ஏரிக்கு சீரான குடிநீர் வந்தடையும். வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் மழை நீரை எப்பொழுதும் உள்ளது போல் சேமிப்பதற்கு இந்த கட்டுமானப் பணிகளால் தடையேதுமில்லை என்று நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சோழவரம் ஏரிக்கு பூண்டி ஏரியின் உபரி நீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு நீர்பிடிப்புப் பகுதிகளிலிருந்தும் நீர் பெறப்படுகிறது.

எதிர் வரும் வடகிழக்குப் பருவமழையின் மூலம் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. மேலும் ஜனவரி மாதம் முதல் கிருஷ்ணா நதிநீர் பங்களிப்பு திட்டம் வாயிலாக 4 டி.எம்.சி தண்ணீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு கிடைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னரே நீர் வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு அடுத்த ஒருவருட காலத்திற்கு இருப்பில் உள்ள குடிநீரைக் கொண்டு தொடர்ந்து எந்தவித தங்குதடையின்றி சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இயலும் என சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com