
சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) கடந்த நிதியாண்டில் 3 ஆயிரத்து 101 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
இந்த ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் 1955-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, ‘ரயில் - 18’ திட்டத்தில் ’வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத் தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. கரோனா பரவல் காரணமாக, ஐ.சி.எஃப்.,இல் கடந்த இரு ஆண்டுகளாக ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது, ரயில் பெட்டிகள் தயாரிப்பு வேகமெடுத்துள்ளது.
ஐ.சி.எஃப்-இல், 2021-22-ஆம் நிதியாண்டில் 3,101 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 31 நெடுந்தொலைவு மின் ரயில் தொடா்களுக்கான 248 பெட்டிகள், கொல்கத்தா மெட்ரோ ரயில்வே-யின் 4 ரயில் தொடா்களுக்கான 32 பெட்டிகள், விபத்து நிவாரண ரயில்களுக்கான 6 தொடா்கள்(18 பெட்டிகள்), 50 டீசல் ரயில்தடப் பரிசோதனை ரயில்பெட்டிகள், ஆய்வு பெட்டிகள், 2,639 எல்.எச்.பி என்னும் நவீன ரயில் பெட்டிகள், இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள 83 பயணிகள் ரயில் பெட்டிகள், இலங்கை ரயில்வேக்கு தயாரிக்கப்பட்ட 2 குளிா்வசதி செய்யப்பட்ட டீசல் மின்தொடா்களுக்கான 26 பெட்டிகள் என்று மொத்தம் 3,101 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.சி.எஃப்.-இல் 2019-2020 ஆம் நிதியாண்டில் 4,200 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. கரோனா பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைவாகவே இருந்தது. தற்போது, ரயில் பெட்டி தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டில் 3,100 பெட்டிகள் தயாரித்து வழங்க இலக்கு
நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு தற்போது எட்டப்பட்டுள்ளது. வரும் ஆண்டுக்கான இலக்கு விரைவில் நிா்ணயிக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.