கோவை என்றாலே பிரமாண்டம்தானே.. முதல்வர் ஸ்டாலின்

கோவை என்றாலே பிரமாண்டம்தானே என்று புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின், கோவையின் பெருமைகளையும் பட்டியலிட்டார். 
கோவை என்றாலே பிரமாண்டம்தானே.. முதல்வர் ஸ்டாலின்
கோவை என்றாலே பிரமாண்டம்தானே.. முதல்வர் ஸ்டாலின்

கோவை என்றாலே பிரமாண்டம்தானே என்று புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின், கோவையின் பெருமைகளையும் பட்டியலிட்டார். 

கோவை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், கோவையில் இத்தகைய பிரமாண்டமான விழா நடப்பது பொருத்தமானதுதான். ஏனென்றால் கோவை என்றாலே பிரமாண்டம்தானே. 

தென்னிந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரம் இந்தக் கோவை.
பெருந்தொழில்கள் கொண்ட நகரம் மட்டுமல்ல, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் ஏராளமாக இருக்கும் நகரம் இந்தக் கோவை!
பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டுமல்ல – தமிழ்நாட்டுக்கே ஏற்றுமதி இறக்குமதிக் குறியீடுகளில் வளமான அளவீடுகளை வழங்கும் மாவட்டமாக இந்தக் கோவை அமைந்துள்ளது.

என்ன தொழில்தான் இல்லை! என்று வியந்து சொல்லத்தக்க வகையில் இந்த மாவட்டம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
நூற்பாலைகள்,
விசைத்தறிகள்,
வார்ப்பாலைகள்,
வெட்கிரைண்டர் தயாரிப்பு,
மோட்டார் பம்புகள் தயாரிப்பு,
உதிரி பாகங்கள் தயாரிப்பு,
நகைத் தயாரிப்பு நிறுவனங்கள்,
தென்னை நார் சார்ந்த தொழில்கள்,
உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் –
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்தளவுக்கு தொழில் வளம் கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக இந்தக் கோவை மாவட்டம் விளங்கிக் கொண்டிருக்கிறது!

ரூபாய் 662 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், 748 புதிய திட்டப்பணிகளுக்கு இன்றைக்கு நான் அடிக்கல் நாட்டி இருக்கிறேன், சற்றுமுன் உங்களுக்கு முன்னால் அடிக்கல் நாட்டினேன்.

ரூபாய் 272 கோடி மதிப்பீட்டில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை இன்றைக்கு உங்கள் முன்னால் தொடங்கி வைத்திருக்கிறேன்.
கடந்த ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் இந்தக் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆயிரத்து 234 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 185 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதிலிருந்து இந்த அரசு மக்களுக்காக இருக்கிறது, இந்த அரசு பல காரியங்களைச் செய்து கொண்டு இருக்கிறது, சாதனைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தெளிவாக அறியலாம்.

ஏதோ சிலருக்கு உதவிகளைச் செய்துவிட்டு கணக்குக் காட்டுபவர்கள் அல்ல நாங்கள். கணக்கில்லாத உதவிகளை – கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளைச் செய்யும் அரசுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு என்பதை நான் கம்பீரமாகச் சொல்வேன்.

மிக எழுச்சியோடு, ஏற்றத்தோடு, பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கும் இன்றைய நிகழ்ச்சியை மேலும் மும்மடங்கு பிரம்மாண்டமாக்கும் வகையில், மூன்று புதிய முன்னெடுப்புகளைத் தொடங்கவுள்ளோம் என்பதையும் மிக மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

161 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
60 கல்லூரிகள் மற்றும் 200 அரசுப் பள்ளிகளுடன், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைம்பெண்கள் ஆகியோருக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சமவாய்ப்பு மையம்; திட்டம் தொடங்கப்படுகிறது.
 

அதேபோல, கோவை மாவட்டத்து மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாபெரும் திட்டம்தான், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் இங்கே பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார், பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கம் திட்டம்!

கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஆயிரத்து 810 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

உலக அளவிலான தொழில் நகரமான கோவையின் வளர்ச்சிக்காக இதுபோன்ற பல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த ஓராண்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிடுவதில் நான் பெருமைப்படுகிறேன்.
புதிய தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தில், 85 பயனாளிகளுக்கு 18 கோடியே 47 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முகவரி என்ற திட்டத்தின் மூலம் 679 நபர்களுக்கு 31 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 57 ஆயிரத்து 150 பேர் பயனடைந்துள்ளார்கள்.
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ், 19 ஆயிரத்து 590 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகளில், 5 பவுனுக்கு உட்பட்டிருக்கக்கூடிய நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ததன் மூலம், 47 ஆயிரத்து 567 பயனாளிகளுக்கு 199 கோடியே 53 லட்ச ரூபாய் தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
10 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 24 ஆயிரத்து 839 வீட்டு மின் இணைப்புகளும், 13 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 294 தொழிற்சாலை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4 ஆயிரத்து 264 கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூபாய் 28 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில், 5 ஆயிரம் 970 விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் தரப்பட்டுள்ளது.
1,703 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 66 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
13,171 சுய உதவிக் குழுக்களுக்கு 856 கோடியே 54 லட்ச ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 19.5.2022 அன்று கோயம்புத்தூரில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் தொடர்ந்து நான் இதே கோவையில் 3 மணி நேரம் அவர்களை உட்கார வைத்து கலந்துரையாடி, அவர்களின்

கோரிக்கைகளையெல்லாம் கேட்டு, படிப்படியாக அந்தக் கோரிக்கைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இந்த ஓராண்டு காலத்திற்குள் செய்து தரப்பட்டிருக்கக்கூடிய பணிகள்! இதனுடைய தொடச்சியாகத்தான் இந்த மாபெரும் விழா நடந்து கொண்டிருக்கிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணிகள் விரைந்து நடைபெறும்.
மத்திய சிறைச்சாலையை இடம் மாற்றி, அந்த இடத்தில் 200 கோடி ரூபாய் செலவில், செம்மொழிப் பூங்கா விரைவில் அமைக்கப்படவிருக்கிறது.
கோயம்புத்தூர் மக்களின் குடிநீர்த் தேவையினைத் தீர்ப்பதற்காக, சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று மாண்புமிகு கேரள முதலமைச்சரிடம் நான் கடிதம் மூலமாகக் கேட்டுக் கொண்டேன், தொலைபேசியில் வலியுறுத்தினேன். மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய, கேரள அரசால் போதிய தண்ணீர் உடனடியாக திறந்துவிடப்பட்டது.
கோயம்புத்தூரில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சென்னையைப் போன்று கோயம்புத்தூரில், வீட்டுமனை மற்றும் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதற்கு, அங்கீகாரம் பெறுவதற்கு, கோயம்புத்தூர் மாநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது என்று  முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com