அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது: ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்னாள் அமைசர் டி.ஜெயக்குமார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்னாள் அமைசர் டி.ஜெயக்குமார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றபோது, சென்னை வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெரு 49-ஆவது வார்டு வாக்குச் சாவடிக்குள் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. மேலும் அவர், கள்ள வாக்குகளைப் பதிவு செய்ததாக தகவல் பரவியது.
 இதையறிந்த முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் திரண்டு வந்து, நரேசை பிடித்து தாக்கி, சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
 மேலும் காவல்துறையைக் கண்டித்து ஜெயக்குமார், தலைமையில் அதிமுகவினர் ராயபுரம் எம்.சி. சாலை, கல் மண்டபம் சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இது தொடர்பாக ராயபுரம் போலீஸார், ஜெயக்குமார் உள்பட 70 பேர் மீது தொற்று நோய் பரவல் சட்டம், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல நரேஷ், தான் தாக்கப்பட்டது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார், அத்துமீறி நுழைதல், அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல், குழப்பம் விளைவித்தல், அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
 இதில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜெயக்குமார், கடந்த 21-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
 மீண்டும் கைது: இந்நிலையில் ராயபுரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குத் தொடர்பாக பூந்தமல்லி சிறையில் இருந்த ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஜார்ஜ் டவுன் 16-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை நீதித்துறை நடுவர் தயாளன், மார்ச் மாதம் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
 அதேவேளையில், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 8 சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்ட நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மேலும் ஒரு சட்டப்பிரிவு புதன்கிழமை சேர்க்கப்பட்டது.
 மனு தள்ளுபடி: இதற்கிடையே ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு, ஜார்ஜ் டவுன் 16-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரணை செய்த நீதித்துறை நடுவர் தயாளன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 அதேவேளையில் ஜெயக்குமார் தரப்பு வழக்குரைஞர்கள், ராயபுரம் வழக்கில் ஜாமீன் கேட்டு மற்றொரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமை (பிப்.24)க்கு ஒத்தி வைத்து நீதித்துறை நடுவர் தயாளன் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com