டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் உள்ளது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயப் பெருமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, முழு ஈடுபாட்டுடன் உழவுப் பணிகளை மேற்கொண்டு தாளடி நெல் பயிர்கள், சம்பா நெல் பயிர்கள் இன்னும் 15 நாட்கள் முதல் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இதனால், அறுவடைக்குத் தயாராக இருக்கும் சுமார் 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரால் மூழ்கியதை கண்டு வேளாண் பெருமக்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர் என்று நாளிதழ்களில் செய்தி வந்துள்ளன. 

ஏற்கெனவே குறுவை சாகுபடி மேற்கொண்டு, தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழையினால், டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேரில் பார்வையிட்டு, வேளாண் பெருமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். மேலும், அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி பாதிப்புகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை உடனுக்குடன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் கனமழையில் நனைந்து முளைவிட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாயினர். மேலும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சரியான முறையில் பாதுகாப்பாக வைக்கத் தவறியதால் சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் வீணாகியுள்ளன என்று செய்திகள் வயதுள்ளன. நேற்று கூட கும்பகோணத்தில் பெய்த கனமழையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டிருந்த சுமார் 10,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கத் தவறிய இந் அரசின் மெத்தனப் போக்கை கடுமையாக கண்டிக்கிறேன்.

தற்போது பெய்த கனமழையினால் பாதிப்படைந்த விவசாயிகளின் துயரத்தை போக்கும் வண்ணம் இந்த அரசு உடனடியாக வேளாண்துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக அனுப்பி பாதிப்புகளை மதிப்பிட்டு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, தேவைப்படும் இடங்களில் உடனடியாக திறக்க வேண்டும் என்று இந்த அரசை வற்புறுத்துகிறேன். அம்மாவின் ஆட்சியிலும், தொடர்ந்து அம்மா அரசு ஆட்சி புரிந்தபோதும், புயல், மழையினால் சேதமடைந்த விவசாயிகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியுதவி வரும் வரை காத்திராமல் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால், கடந்த தென்மேற்கு பருவ மழையில், குறுவை சாகுபடியின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த அரசு இதுவரை நிவாரண உதவிகளை வழங்கவில்லை. தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில், காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக ஏற்பட்ட புயல் மற்றும் கன மழையினால் பாதிப்படைந்த வேளாண் பெருமக்களுக்கும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. தொடர்ந்து இரண்டு பருவமழைக் காலங்களிலும் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, இனியும் மத்திய அரசு புயல் நிவாரண நிதி வழங்கவில்லை என்று காரணம் கூறாமல், ஏற்கெனவே எனது அறிக்கையில் வலியறுத்தியவாறு முழுமையாக சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000/- என்று அறிவித்துள்ளதை உயர்த்தி ஹெக்டேருக்கு 40,000 ரூபாயாகவும் ரூபாயாகவும், நெற்பயிர் மறு சாகுபடி செலவு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038/- என்று அறிவித்துள்ளதை 12,000 ரூபாயாக உயர்த்தி, ஏற்கெனவே அதிகாரிகள் கணக்கெடுத்துள்ள நிலப்பரப்புக்கு ஏற்றவாறு நிவாரணத் தொகையை உயர்த்திக் கணக்கிட்டு பாதிப்படைந்துள்ள விவசாயப் பெருமக்களுக்கு மாநில நிதியைக் கொண்டு உடனடியாக இரண்டு பருவமழைக் காலங்களிலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டும் வழங்க வேண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையினை உடனடியாக பெற்றுதர வேண்டும். அதோடு கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் இழப்பீட்டினை உடனடியாகக் கணக்கெடுத்து வழங்கிட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com