இரு மொழிக்கொள்கையே கடைபிடிக்கப்படும்: ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு முதல் இரு மொழிக்கொள்கையே அரசின் மொழிக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு முதல் இரு மொழிக்கொள்கையே அரசின் மொழிக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கையினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில் ஆளுநர், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல நம்முடைய தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும் எனவும் பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரியல்ல எனவும் தனது குடியரசு நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து அது ஊடகங்களிலும் பரவலாக வெளிவந்திருந்தது.

தமிழ்நாட்டின் மொழிப்போராட்ட வரலாறை அறிந்தோருக்குப் பிற இந்திய மொழிகள் என்பது இந்தியை முன்னிலைப்படுத்தும் சொற்பிரயோகம் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. தமிழ் நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான மொழிப்போராட்டம் என்பது நெடிய வரலாற்றை உள்ளடக்கியது. தந்தைப் பெரியாரும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும், தமிழறிஞர்கள் பலரும் முன்னெடுத்த மொழிப் போராட்டம் தொடங்கிப் பல்வேறு கால கட்டங்களில் நடந்த போராட்டங்களில் தங்களது இன்னுயிரை ஈந்த மொழிப்போராட்டத் தியாகிகளை ஈன்று புறந்தந்தது தமிழ்நாட்டு மண்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்தான் அன்றைய பிரதமர் பண்டித நேரு இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாத வரை கட்டாயமாக இந்தியைத் திணிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தார்.

அதன் பின்னர் தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக அரசு 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெறும் இரு மொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என அறிவித்து அன்று முதல் இன்று வரை இரு மொழிக் கொள்கையே தமிழ்நாட்டு அரசின் மொழிக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதை நான் ஆளுநரின் மேலான கவனத்திற்குச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

இரு மொழிக் கொள்கையால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில் அவர்களில் இடம் பெறும் வகையில் பெறும் வாய்ப்புகளிலோ யாதொரு பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை என்பதையும் ஆளுநர் நன்கறிவார் என நான் நம்புகின்றேன்.

அதே போல, நீட் தேர்வின் காரணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ் தகுதிப் பட்டியலில் முதல் 1000 இடங்களில் சிபிஎஸ்சி மாணவர்கள் 579 பேர், மாநில பாடத்திட்ட வாரியத்தில் பயின்ற 394 பேர் மற்றும் ஐசிஎஸ்சி போன்ற பிற பாடத்திட்டங்களில் படித்த 27 பேர் இடம் பெற்று உள்ளனர்.

இந்தப் பாகுபாட்டினைக் களையும் வண்ணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும். எனினும் அது ஒரு தற்காலிகத் தீர்வு தான் என்பதனையும் மாநிலப் பாடத்திட்ட வாரியம் மூலம் பயிலும் மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளியில் பயின்று தனியார் பயிற்சிப் பள்ளிகளில் ஏராளமான கட்டணம் செலுத்திப் படிக்க இயலாத மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சமூக நீதியின் அடிப்படிடையில் தங்களுக்கான இடங்களைப் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெற வேண்டும் எனில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுவதே நிரந்தமான தீர்வாக அமையும் என்பதனையும் முதல்வர் தொடந்து வலியுறுத்தி வருகிறார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப் பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றது. ஆளுநர் அந்த சட்ட முன் வடிவிற்குத் தன்னுடைய இசைவினையும் விரைவில் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் மருத்துவப் படிப்பு கனவுகளை நிறைவேற்றத் தமிழ்நாடு முதல்வரின் முன்னெடுப்புகளுக்கும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் துணை நிற்பார் எனவும் நான் நம்புகின்றேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com