அதிமுக பொதுச் செயலாளராகிறாரா இபிஎஸ்?

வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் கழக இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக பொதுக்குழு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் கழக இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக பொதுக்குழு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதிமுகவில் ஓ. பன்னீர் செல்வம் - எடப்பாடி கே பழனிசாமி இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில் கடந்த  ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றன. 

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாகவும் அடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அதிமுகவில் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இபிஸ்-ஸை அதிமுகவுக்கு தலைமையேற்க வைக்க  முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்து நீதிமன்றங்களில் வழக்குகளின் விசாரணையும் இருந்து வருகிறது. 

குறிப்பாக. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படாத புதிய தீா்மானங்களை நிறைவேற்றுவதற்கு தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து இபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை (ஜூலை 6) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

இந்நிலையில்தான் அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. 

அதில், 'கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது, 

கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது, 

மேலும், கழக இடைக்கால பொதுச் செயலாளரை நடைபெற உள்ள பொதுக்குழுவிலே தேர்வு செய்து அறிவித்தல்

பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவித்தல்' ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும் இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. 

இதனால், நீதிமன்றத் தடை எதுவும் இல்லாத நிலையில், உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும்பட்சத்தில் எடப்பாடி கே. பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராகும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதிமுக பொதுக்குழு அழைப்பிதழும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் ஓபிஎஸ்-க்கும் அதிமுக பொதுக்குழு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, கடந்த 2017ல் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதிலாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது. 

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தேர்வான நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. 

தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை கொண்டுவர கோரிக்கை வலுத்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com