
அதிமுக அலுவலகம்(கோப்புப்படம்)
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட நிலையில், வருவாய்த்துறையினர் சீல் வைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கம்: சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றம்
இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு திங்கள்கிழமை காலை 9.15 தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்க | தடையை உடைத்து அதிமுக அலுவலகத்தில் நுழைந்த ஓபிஎஸ்: ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!
அப்போது, அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, கட்சி அலுவலகத்திற்குள் செல்ல இருக்கும் உரிமை குறித்து ஓபிஎஸ் தரப்பினரும் காவல்துறையினரிடம் விளக்கமளித்துள்ளனர்.
இதையும் படிக்க | அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்தானது
இதனைத் தொடர்ந்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் காவல் இணை ஆணையர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில், அதிமுக அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.