மேட்டூர் நிரம்பியது: நீர் திறப்பு 1.28 லட்சம் கன அடியாக உயர்வு

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால், சுற்றுப்புறத்திலுள்ள 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை: நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணை: நீர் வெளியேற்றம்

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால், சுற்றுப்புறத்திலுள்ள 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேட்டூர் அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு 1.28 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நீர்மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின்  நீர்மட்டம் இன்று காலை 120.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,24,113 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் போக்கியில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதால் அப்பகுதி வெள்ளக்காடாக காணப்படுகிறது.

இன்று விடுமுறை நாள் என்பதால் மேட்டூர் அணையை பார்க்க ஆயிரகணக்கானோர் வந்து கூடுவார்கள். இதனால் நெரிசல் ஏற்படும் என தங்கமாபுரி பட்டினம், சேலம் கேம்ப், காவேரி பாலம் பகுதிகளில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்துள்ளனர். மேட்டூர் அணையை பார்வையிட செல்பவர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று ஆடி முதல் நாள் என்பதால் மேட்டூர் காவிரியில் நீராட நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள மட்டம் பகுதியில் தலையில் நாணயமும் அருகம்புள்ளும் வைத்து காவிரியில் மூழ்கி செல்கின்றனர். புதுமண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி வணங்கி காவிரியில் விட்டு சென்றனர்.

தங்களின் மூதாதையர்களுக்கு காவிரிக்கரையில் திதி கொடுத்தும் செல்கின்றனர். குல தெய்வங்களை நீராட்ட மேட்டூர் காவிரியில்  பக்தர்கள் புனித நீர் எடுத்து சென்றனர். இந்தப் பகுதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் போலீசார் ஊர்க்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை:

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி,  திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com