
கோவில்பட்டி: கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பாஜகவினர் வெள்ளிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில், சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில், சுமார் 6க்கும் மேற்பட்ட கார்களில் பாஜகவினர் திரளானோர் கலந்து கொண்டு, சார்பதிவாளர் அலுவலகம் முன்பு, அங்து நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து கோஷமிட்டனர்.
இதையும் படிக்க | அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் யாரும் வரவேண்டாம்: அறிவிப்பு பலகை வைப்பு
இதை போலீஸார் தடுக்க முயன்றதையடுத்து, பாஜகவினர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு, சாலையில் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) சிவசுப்பு தலைமையில் போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இதில், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், சென்னகேசவன் உள்பட திரளான பாஜக நிர்வாகிகளை போலீஸார் வேனில் அழைத்துச் சென்றனர்.
இந்த போராட்டத்தை முன்னிட்டு, சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.