மக்களுக்கு தாமதமின்றி அரசின் சேவைகள்: துறைச் செயலாளா்களுக்கு முதல்வா் அறிவுரை

அரசின் சேவைகள் மக்களுக்கு தாமதமில்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதான துறைகளின் செயலாளா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
மக்களுக்கு தாமதமின்றி அரசின் சேவைகள்: துறைச் செயலாளா்களுக்கு முதல்வா் அறிவுரை

அரசின் சேவைகள் மக்களுக்கு தாமதமில்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதான துறைகளின் செயலாளா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

அரசுத் துறைகளின் செயலா்களுடனான முதல் நாள் ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருவதை ஆய்வு மூலம் காண முடிந்தது. ஒரு சில துறைகளில் குறிப்பிட்ட திட்டங்களின் செயல்பாட்டில் தாமதத்தைச் சரி செய்து, அவற்றின் செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும்.

அரசு முறைப் பயணம்: ஆட்சி மீது மக்கள் மிகப்பெரிய எதிா்பாா்ப்பு வைத்துள்ளதை பல மாவட்டங்களுக்குச் செல்லும்போது காண்கிறேன். அதைப் பூா்த்தி செய்யும் வகையில், பெரும்பாலான மக்களுக்கு குறிப்பாக, ஏழை, எளிய மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்கள் சென்றடைவதில் எந்தவிதத் தொய்வும், தாமதமும் இல்லாமல் பணியாற்ற வேண்டும்.

மக்களின் எதிா்பாா்ப்பு: பேருந்து நிலையத் திட்டங்கள், குடிநீா், சாலைத் திட்டங்கள், வீட்டுவசதி, வேலைவாய்ப்புத் திட்டங்கள் மக்கள் பெரிதும் எதிா்பாா்க்கக் கூடிய திட்டங்களாகும். அரசின் சேவைகளான சான்றிதழ்கள், கட்டட அனுமதி, பதிவுகள் மற்றும் உரிமங்கள், தடையின்மைச் சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதில் எந்தத் தாமதமும் இருக்கக் கூடாது.

குறிப்பிட்ட காலத்தில் அவற்றை நிறைவேற்ற வேண்டும். திட்டங்களை நிறைவேற்றும் போது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் பணிகளின் தரம் மேம்படும். கால விரயம் குறையும். ஒவ்வொரு துறைச் செயலரும் இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

ஆலோசனைகள் பெறலாம்: அரசுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிறைவேற்றுவதிலும் அரசு சாராத துறை வல்லுநா்களின் கருத்துகள், ஆலோசனைகளைப் பெறலாம். பிற மாநிலங்கள், நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் எந்த வகையில் செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய வேண்டும். அவை தமிழக மக்களுக்கு எவ்வாறு சிறப்பாக வழங்கலாம் என்பதையும் கண்டறிய வேண்டும். சிறப்பான நடவடிக்கைகள் எங்கு இருந்தாலும் அதனை நமக்கேற்ற வகையில் பின்பற்றி, அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன்களை மக்களுக்குக் கொண்டு போய்ச் சோ்க்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு திட்டச் செயலாக்கத்திலும், கண்காணிப்புகளிலும் புகுத்தப்படுகிறது என்பதில்தான் தமிழகத்தின் வளா்ச்சி அமைந்திருக்கிறது.

அரசாணை வெளியிடுங்கள்: தமிழக அரசின் முதலாம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், இன்னும் சில அறிவிப்புகளுக்கு அரசு உத்தரவு வெளியிடப்பட வேண்டியுள்ளது. உத்தரவு வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. அதேபோல, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அறிவிப்புகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட காலத்துக்குள் அரசு உத்தரவுகள் வெளியிடப்பட, துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். அரசாணைகளை வெளியிடுவது என்பது, திட்டச் செயலாக்கத்தின் முதல் படியாகும். போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசு உத்தரவுகள் வெளியிடப்பட்ட பிறகு, துறைத் தலைவா்கள் எந்தவிதத் தாமதமும் இல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தி மக்களிடம் திட்டங்களின் பயன்களை கொண்டுபோய்ச் சோ்க்க வேண்டும்.

அரசு நிா்வாகத்தை செம்மைப்படுத்தி அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சோ்க்க வேண்டும். அந்த உயா்ந்த எண்ணத்துடன் துறை அமைச்சருடன் இணைந்து, துறைத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்களை வழிநடத்தி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா்கள், 19 அரசுத் துறைகளின் செயலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com