இபிஎஸ்ஸுக்கு வலுக்கும் ஆதரவு: ஓபிஎஸ் நிலை என்ன?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறி வருகின்றனர்.
இபிஎஸ்ஸுக்கு வலுக்கும் ஆதரவு: ஓபிஎஸ் நிலை என்ன?


அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறி வருகின்றனர். 

நேற்று 5 பேர் இபிஎஸ் அணிக்கு தாவிய நிலையில், இன்று தென்சென்னை தென்கிழக்கு மாவட்ட செயலர் அசோக், மைத்ரேயன் ஆகியோர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி இபிஎஸ் தரப்பில் இணைந்துள்ளனர். 

சென்னை வானகரத்தில் நாளை (ஜூன் 23) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வர அதிமுகவின் முக்கியத் தலைவா்கள் முயன்று வருகின்றனர்.

இந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பல்வேறுகட்டங்களாக தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாளை (ஜூன் 23) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

சென்னை வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ள  பொதுக்குழு கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி தரக்கூடாது என்ற ஓபிஎஸ் தரப்பினர் வைத்த கோரிக்கையையும் ஆவடி காவல் ஆணையரகம் மறுத்துள்ளது. இதனால் நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் இபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ் அணிக்கு மாறி வருகின்றனர். நேற்று 5 மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ் அணிக்கு மாறிய நிலையில், இன்று வேளச்சேரி அசோக் ஓபிஎஸ் தரப்பிலிருந்து இபிஎஸ் அணிக்கு மாறியதாக கூறப்படுகிறது.

இதேபோன்று ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு ஆதரவாளரான மாநிலங்களவை முன்னாள் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியுள்ளார். 

இதனால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை  பலம் 5 ஆக குறைந்துள்ளது. இதனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இபிஎஸ் கை உயர்ந்துள்ளது.

ஓபிஎஸ் தரப்பின் நிலை?

நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

பொதுக்குழு நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையிலுள்ளதால், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக முடிவு செய்யப்படலாம். இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com