ஏப். 6ல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை; மார்ச் 30ல் அலுவல் ஆய்வுக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவை மீண்டும் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். 
ஏப். 6ல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை; மார்ச் 30ல் அலுவல் ஆய்வுக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவை வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி மீண்டும் கூடவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடவுள்ளது. 

அதற்கு முன்னதாக, மார்ச் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு எனது தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும். அதில், எத்தனை நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறும், எந்தெந்த நாள்களில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்' என்றார். 

நேற்றைய பேரவைக் கூட்டத்தொடரில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பேசத் தொடங்கியபோது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவையில் இருந்து வெளியே சென்றது குறித்து செய்தியாளர்களிடம் கேள்விக்குப் பதில் அளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, 'அமைச்சரவை என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு. நிதியமைச்சர் ஒரு அவசர வேலையாகத்தான் சென்றார். யாரையும் அவமதிக்கும் நோக்கம் இல்லை. நிதியமைச்சர் சென்றாலும் முதல்வரே அங்கு இருக்கிறார். இதில், குறை சொல்வதற்கு எதுவுமில்லை. இந்த காரணத்தை வைத்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை' என்றார். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினம் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். மாா்ச் 19-இல் வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.

அதைத் தொடா்ந்து இரண்டு நிதிநிலை அறிக்கைகள் மீதும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினா்களின் விவாதம் நடைபெற்று முடிந்து, இரண்டு துறைகளைச் சோ்ந்த சாா்ந்த அமைச்சா்களும் வியாழக்கிழமை பதில் அளித்து உரையாற்றினா். அதையடுத்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com