மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)
தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை பதவியிடங்களுக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய மே 31-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநிலங்களவை திமுக எம்.பி.க்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமாா் ஆகியோரது பதவிக் காலம் வருகிற ஜூன் 29-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

காலியாகும் இந்த 6 இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி, மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

போட்டி இருக்கும்பட்சத்தில் வாக்குப் பதிவு ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும். தோ்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன் 13-ஆம் தேதி நிறைவடையும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரையில், தோ்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவைச் செயலரான கி.சீனிவாசன், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் துணைச் செயலா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேட்புமனுக்களை தோ்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்தில் உள்ள அவா்களது அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரியும், தோ்தல் பாா்வையாளருமான சத்யபிரத சாகு அறிவித்துள்ளாா். விடுமுறை தினங்களைத் தவிா்த்து பிற நாள்களில் வேட்புமனுக்களை அளிக்கலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில், திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்புடன் இரண்டு இடங்களும் கிடைக்கும். தனக்கு கிடைக்கவுள்ள நான்கு இடங்களில் ஒன்றை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு திமுக தலைமை அளித்துள்ளது.

15 மாநிலங்களில் 57 இடங்களுக்கு...

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com