சென்னையில் நரேந்திர மோடி: ஒரே மேடையில் பிரதமர், முதல்வர்

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் பிரதமர்: ஒரே மேடையில் பிரதமர், முதல்வர்
சென்னையில் பிரதமர்: ஒரே மேடையில் பிரதமர், முதல்வர்

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைக்க, சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்குத் தொடங்கிய விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மத்திய இணையமைச்சர் எல். முருகன், தொடக்க உரையாற்றினார். தமிழக மக்கள் சார்பாக பிரதமர் மோடியை வரவேற்பதாக அவர் கூறினார்.

விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றி வருகிறார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும், மத்திய இணையமைச்சர் எல். முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதன்மைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். 

நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்து கொண்டிருந்தபோது, பாஜக தொண்டர்கள் அதிகம் கூடியிருந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் வந்த போது, காரை நிறுத்தி, காரின் கதவை திறந்து கையசைத்து வரவேற்பினை ஏற்றுக் கொண்டார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், நிறைவடைந்த 5 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

75 கி.மீ. தொலைவுள்ள ரூ.500  கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை-தேனி இடையேயான அகல ரயில் பாதை,  சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு ரூ.590 கோடி மதிப்பில் மூன்றாவது ரயில் பாதையை தொடக்கி வைக்கிறார். இதன்மூலம் புறநகர் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்.

மேலும், ரூ. 850 கோடி மற்றும் ரூ. 910 கோடி  மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கி.மீ. நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கி.மீ. நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் உள்ள நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பிரதமர் திறந்து வைக்கிறார்.

அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இரவு 7.45 மணியளவில் சென்னையில் இருந்து தில்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் செல்கிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக சென்னைக்கு வந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அரசுத் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com