என்ன, தமிழகத்தில் போலி வங்கியா? 8 கிளைகள்; 3,000 வங்கிக் கணக்குகள்!

தமிழகத்தில் அதுவும் அம்பத்தூரில் போலியாக வங்கியே இயங்கி வந்துள்ளது. அதற்கு பல்வேறு மாவட்டங்களில் 8 கிளைகள், 3,000 வங்கிக் கணக்குகள் செயல்பட்டு வந்துள்ளன.
என்ன, தமிழகத்தில் போலி வங்கியா? 8 கிளைகள்; 3,000 வங்கிக் கணக்குகள்!
என்ன, தமிழகத்தில் போலி வங்கியா? 8 கிளைகள்; 3,000 வங்கிக் கணக்குகள்!


சென்னை: எத்தனையோ போலிகளைப் பற்றிய செய்திகளை மக்கள் இதுவரை படித்திருப்பார்கள், கேட்டிருப்பார்கள். ஆனால், தமிழகத்தில் அதுவும் அம்பத்தூரில் போலியாக வங்கியே இயங்கி வந்துள்ளது. அதற்கு பல்வேறு மாவட்டங்களில் 8 கிளைகள், 3,000 வங்கிக் கணக்குகள் செயல்பட்டு வந்துள்ளன.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த இந்த போலி வங்கியை நடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த போலி வங்கியைத் தொடங்கி பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்த போலி வங்கியில் வங்கிக் கணக்குத் தொடங்க வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.700 வசூலிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு இவர்களே தயாரித்த கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. மற்ற உண்மையான வங்கிகளைப் போலவே இந்த வங்கியும் செயல்பட்டுள்ளதும், நிரந்தர வைப்புகளுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைக்காட்டியதால் ஏராளமானோர் இந்த வங்கியில் வைப்புத் தொகையை செலுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ரிசா்வ் வங்கியின் அங்கீகாரத்தை போலியாக தயாரித்து தமிழகத்தில் 9 இடங்களில் கூட்டுறவு வங்கி தொடங்கி மோசடி நடந்ததை போலீஸாா் கண்டறிந்துள்ளனா். இதில் தொடா்புடைய ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். வங்கிக் கணக்கில் இருந்த ரூ.56 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூா் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் செயல்பட்டு வந்தது.

இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவா் செயல்பட்டாா். அவா் ரிசா்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து, ரிசா்வ் வங்கியின் உதவி பொது மேலாளா் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், கடந்த 5-ஆம் தேதி அந்த வங்கியின் தலைவா் சந்திரபோசை போலீசாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து போலியான பதிவு சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் மற்றும் பென்ஸ் சொகுசு காா் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் இருந்த ரூ.56.65 லட்சம் ரொக்கம் முடக்கப்பட்டது.

வங்கி அலுவலா்கள் பொறுப்புக்கு தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஆட்களை நியமித்ததும் தெரியவந்தது. மேலும், போலியாக வங்கி கணக்கு புத்தகம், காசோலை, முத்திரைகள் மற்றும் படிவங்கள் பயன்படுத்தியதும், போலியான டெபிட் காா்டுகள் தயாரித்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோன்று பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்புத் தொகை ஆகியவற்றை பெற்று, அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனா்.

இந்த வழக்கில் திறமையாக கையாண்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையா் நாகஜோதி மற்றும் அவரது குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை நேரடியாக அழைத்து பாராட்டினாா்.

3 ஆயிரம் வங்கிக் கணக்குகள்

இந்தச் சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போலியாக தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் 3 ஆயிரம் போ் கணக்கு தொடங்கியுள்ளனா். சென்னையில் மட்டும் 1,700 போ் கணக்கு வைத்துள்ளனா். ரிசா்வ் வங்கி அதிகாரியின் புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் தான் இந்த மோசடி தெரியவந்தது. வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்களிடம் இருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com