தலைவரான பிறகு தொண்டர்களுக்கு முதல் கடிதம்: என்ன சொல்கிறார் ஸ்டாலின்? 

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக 2-ஆவது முறையாகத் தோ்வான பிறகு கட்சித் தொண்டர்களுக்கு முதன்முறையாக இன்று கடிதம் எழுதியுள்ளார்.
தலைவரான பிறகு தொண்டர்களுக்கு முதல் கடிதம்: என்ன சொல்கிறார் ஸ்டாலின்? 

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக 2-ஆவது முறையாகத் தோ்வான பிறகு கட்சித் தொண்டர்களுக்கு முதன்முறையாக இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஜனநாயகப் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-ஆவது தேர்தல் பல்வேறு நிலைகளில் நிறைவுற்று, கட்சித் தலைவர் - பொதுச்செயலாளர் - பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் கட்சியின் இதயமாம் பொதுக்குழு நேற்று (9-10-2022) மிகச் சிறப்பான முறையிலே கூடி, ஒரு மனதாகத் தேர்வு செய்து, ஜனநாயகக் கடமையைத் திட்பமாக நிறைவேற்றியுள்ளது.

பொதுக்குழுவில் என் பேச்சில் குறிப்பிட்டதுபோல, “நம்மைப் போல இலட்சக்கணக்கான தோழர்கள் - தொண்டர்கள் இந்தத் தமிழினத்துக்கு உழைக்க சுயமரியாதை காக்கக் காத்திருக்கிறார்கள். நமது பொறுப்பும் கடமையும் மிக மிகப் பெரியது. எந்தப் பொறுப்பாக இருந்தாலும், அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் பொறுப்புகள் தொடரும். மறந்துவிடாதீர்கள்! நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற கவலையான நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்விடாமல் கூட ஆக்கிவிடுகிறது. உங்களது செயல்பாடுகள் கட்சிக்கும் உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது” என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பதவிப் பொறுப்புக்கு வர இயலாமல் போன கட்சித் தொண்டர்களை அரவணைத்துச் செயல்படுங்கள். வெறும் வாயை மெல்லும் அரசியல் எதிரிகளின் வாயில் அவல் அள்ளிப் போடுவது போன்ற சொல்லையும் செயலையும் தவிர்த்திடுங்கள். நம்முடைய இலட்சியம் உயர்வானது. நமக்கான பாதை தெளிவானது. ஆனால், பயணம் எளிதானதல்ல. மதவெறிச் சக்திகளும், வெறுப்பரசியல் கூட்டமும், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கின்ற சதிகளும் அடிக்கு அடி குறுக்கிடுகின்ற காலம் இது. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு பயணிக்கின்ற வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. மக்களின் பேராதரவும் நமக்கு இருக்கிறது.

கட்சி அமைப்பு மேலும் வலிவு பெறும் வகையில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை அதிகளவில் நடத்துங்கள். கட்சியின் கொள்கைகளையும் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தெருமுனைப் பிரசாரங்களை, திண்ணைப் பிரசாரங்களை நடத்துங்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் திட்டங்கள் சரியான முறையில் போய்ச் சேர்ந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி, பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுங்கள். அரசியல் எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை இப்போதே தொடங்குங்கள். முப்பெரும் விழாவில் நான் சொன்னது போல, நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற வெற்றியினை அடைய, களப் பணியாற்றுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com