பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) வயது முதிர்வு காரணமாக இன்று (அக்.10) சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
வில்லுப்பாட்டு என்ற உடனேயே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது இவர் பெயர் மட்டுமே. சுப்பு ஆறுமுகம் 1928ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 'சத்திரம் புதுக்குளம்' என்ற ஊரில் பிறந்தார்.
கோவில் திருவிழாக்களில் இசைக்கப்படும் வில்லுப்பாட்டு இசை வடிவம் அவரை வெகுவாக ஈர்த்தது. சுப்பையா பிள்ளை, நவநீத கிருஷ்ண பிள்ளை, மற்றும் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரிடம் வில்லுப்பாட்டு கலையை முறையாகப் பயின்றார்.
ராமாயணம் மகாபாரதம் மட்டுமின்றி பல்வேறு அரசியல் சமூகப் பிரச்னைகளையும் தமது வில்லுப்பாட்டின் மூலம் வழங்கி உள்ளார். பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
இச்சாதனையாளர் ஒரு தேர்ந்த இசைக் கலைஞர் மட்டுமல்ல!.... ஒரு தலைசிறந்த எழுத்தாளரும் ஆவார்! வில்லுப் பாட்டை மையமாகக்கொண்டு 15 நூல்களை இவர் எழுதியுள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், நூலக வில்லிசை, ராமாயணம், வில்லிசை மகாபாரதம் போன்றவை அவற்றுள் சிலவாகும். இவரது பல வில்லிசை நிகழ்ச்சிகள் ஒலிநாடாக்கள் ஆகவும், குறுந்தகடுகளாகவும் வெளிவந்துள்ளன.
இனிய இசையோடு தேர்ந்த நகைச்சுவை உணர்வையும் புகுத்தி இவர் தமது நிகழ்ச்சிகளை வழங்குவார். இதனால் மக்கள் இவரது நிகழ்ச்சிகளை பெரிதும் விரும்பி பார்த்தனர். இலங்கை மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற இவரது நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மட்டுமின்றி சிங்கள மற்றும் மலேசிய மக்களும் கண்டுகளித்தனர்.
இதையும் படிக்க: தஞ்சையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
2021ம் வருடம் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது. சுப்பு ஆறுமுகத்தின் மறைவு குறித்து பல தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.