வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 1908ஆம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழி, தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத தாகத்தின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.
1972ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற வ.உ.சிதம்பரனாரின் நூற்றாண்டு விழாவில், பாரத பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரால், அன்னாரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அந்நூற்றாண்டு விழாவிலே வ.உ.சியின் திருவுருவம் பதித்த அஞ்சல் தலைகளை பிரதமர்
இந்திராகாந்தி வெளியிட, கருணாநிதி தன்னுடைய திருக்கரங்களால் பெற்றுக் கொண்டனர்.
கருணாநிதியின் ஆட்சி காலத்தில். 1975 முதல் 1976 வரை தூத்துக்குடியில் கட்டிமுடிக்கப்பட்ட 4 கப்பல் தளங்களுக்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் பெயர் சூட்டப்பட்டது. 1998ஆம் ஆண்டு கருணாநிதியால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய 16 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் சுதந்திர தின உரையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், அன்னாரின் 150-வது பிறந்த நாள் மிகச்சிறப்பாகத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, முதல்வர், வ.உ.சிதம்பரனாரின் புகழுக்கு, மேலும் பெருமை சேர்க்கின்ற முத்தான 14 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவற்றில், *சென்னையில்* அன்னாரின் திருவுருவச் சிலை, தூத்துக்குடி மாநகர முதன்மைச் சாலைக்குத் திருப்பெயர், அன்னார் வாழ்ந்த இல்லம், மணிமண்டபங்களில் ஒலி- ஒளிக் கண்காட்சி, அன்னார் படித்த பள்ளி மறுநிர்மானம் மற்றும் புதிய கலையரங்கம், பல்கலைக் கழகத்தில் ஆய்விருக்கை, நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள அன்னாரின் அனைத்து நூல்களும் குறைந்த விலையில் மறுபதிப்பு, கப்பல் கட்டுமானத்துறையில் பங்காற்றிவரும் சிறந்த தமிழருக்கு அன்னாரின் பெயரிலான ரொக்கப் பரிசுடன் கூடிய விருது, அன்னாரின் மறைந்த நாள் தியாகத்திருநாளாக அறிவிப்பு, வ.உ.சி தொடர்பான நூல்கள் மின்னுருவாக்கம் உள்ளிட்ட முத்தான அறிவிப்புகள் முதல்வரால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நம் தேசத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும், அயராது பாடுபட்டும், தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
மேலும், வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கில் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் 05.09.2022 அன்று காலை 10.00 மணிக்கும், 06.09.2022 அன்று காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக நவீன முறையில் (Digital) திரையிடப்படவுள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.