சட்டம்-ஒழுங்கு பிரச்னையா? கோவை செல்கிறார் சைலேந்திரபாபு

கோவையில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு கோவை செல்கிறார். 
சைலேந்திர பாபு (கோப்புப் படம்)
சைலேந்திர பாபு (கோப்புப் படம்)

கோவையில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு கோவை செல்கிறார். 

என்.ஐ.ஏ. சோதனைக்குப் பிறகு தமிழகத்தில் கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜகவைச் சேர்ந்தவர்களின் வீடு, வாகனங்கள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் பாஜக மேற்கு நகர தலைவர் செந்தில் பால்ராஜின் கார் செட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். 

ஈரோடு சத்தியமங்கலம் அருகே புஞ்சைப் புளியம்பட்டியில் பாஜக பிரமுகர் சிவசேகரின் காரை மர்ம நபர் தீ வைத்து எரித்துள்ளனர். 

ராமநாதபுரம் திண்டுக்களிலும் பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

எனினும் குறிப்பாக மதுரை, கோவையில் அதிக அளவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனா்.

காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக கிளைத் தலைவா் மோகன் என்பவருக்குச் சொந்தமான வெல்டிங் கடையில் மா்ம நபா்கள் இரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனா்.

பொள்ளாச்சியில் பாஜக பிரமுகர்களான பொன்ராஜ், சிவா, சரவணகுமார் ஆகியோருக்கு சொந்தமான கார்கள், ஆட்டோக்கள் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 

மதுரையில் ஆா்.எஸ்.எஸ். பிரமுகரின் வீட்டில் சனிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. காா் நிறுத்தும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய காட்சி, அப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. 

நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த 22ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை மேற்கொண்டு, பலரைக் கைது செய்தனா். சோதனையின்போது, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தினா். அதனைத் தொடர்ந்து பாஜக பிரமுகர்களின் வீடு, அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com