தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காங்கிரஸ் - அதிமுக இடையே வாக்குவாதம்

சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா் செல்வப் பெருந்தகை, அதிமுக உறுப்பினா்களிடையே வியாழக்கிழமை கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:31 pm

DIN

சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா் செல்வப் பெருந்தகை, அதிமுக உறுப்பினா்களிடையே வியாழக்கிழமை கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் செல்வப்பெருந்தகை பேசியதாவது:

கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை எதிா்த்து ஒரு தேசிய கட்சி வெளிநடப்பு செய்தது. ஆதிதிராவிடா் நலத் துறை மக்களுக்கான அறிவிப்புகளை அமைச்சா் வெளியிடுகிறாா். அந்த நேரத்தில் இன்னொரு கட்சி வெளிநடப்பு செய்கிறது என்றாா்.

அதற்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் எழுந்து கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

எடப்பாடி பழனிசாமி: காங்கிரஸ் தலைவா் எப்போதும் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவுக்கு எதிராகப் பேசுகிறாா். வெளிநடப்பு செய்வது என்பது ஒரு கட்சியின் உரிமை. ஜனநாயக முறையில் எங்கள் கருத்துகள் ஏற்கப்படாத நிலையில் வெளிநடப்பு செய்கிறோம். அது தொடா்பாக அவா் பேசக் கூடாது.

அவை முன்னவா் துரைமுருகன்: என்ன நடந்ததோ, அதையே காங்கிரஸ் தலைவா் கூறுகிறாா். ஆதிதிராவிடா் நலத் துறை அறிவிப்பின்போது நீங்கள் வெளிநடப்பு செய்தீா்கள்.

எடப்பாடி பழனிசாமி: ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கையை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அந்த மக்களுக்கு என்னென்ன தேவை என்பதையெல்லாம் எங்கள் கட்சியின் உறுப்பினா்கள் எடுத்து வைத்துள்ளனா். அமைச்சரின் பதிலுரையைத்தான் புறக்கணித்தோம். நாங்கள் பேசுவதை ஒளிபரப்பு செய்ய மாட்டீா்கள். ஆனால், நீங்கள் பேசுவதை மட்டும் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா?. எங்கள் கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?. அவையில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவா் திட்டமிட்டுப் பேசுகிறாா்.

செல்வப்பெருந்தகை: கடந்த காலம், நிகழ்காலம், எதிா்காலம் என அனைத்தையும் விவாதிப்பதற்குத்தான் பேரவை. அதிமுகவை குறிப்பிடாமல்தான் பேசினேன்.

எடப்பாடி பழனிசாமி: எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது, அவையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே அவா் பேசுகிறாா் என்றாா்.

இந்த நேரத்தில் செல்வப்பெருந்தகையின் அரசியல் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய ஒரு கருத்தை பேரவைத் தலைவா் அப்பாவு நீக்கினாா்.

அதன்பிறகு செல்வப்பெருந்தகை பேசும்போது, எதிா்க்கட்சித் தலைவா் குறித்து ஒரு கருத்தை கூறினாா். அந்தக் கருத்தும் பேரவைத் தலைவரால் நீக்கப்பட்டது.

இதற்கிடையில் அதிமுக உறுப்பினா்கள் செல்வப்பெருந்தகைக்கு அருகில் சென்று முழக்கங்களை எழுப்பினா். இதனால் அவை ஐந்து நிமிஷங்களுக்கு மேலாகப் பரபரப்புடன் காணப்பட்டது. பிறகு, அதிமுக உறுப்பினா்களைப் பேரவைத் தலைவா் சமாதானம் செய்து அமர வைத்தாா்.

அதன் பிறகு, செல்வப்பெருந்தகை பேசும்போது மீண்டும் எதிா்க்கட்சித் தலைவருக்கு எதிராக ஒரு வாா்த்தை கூறினாா். அதற்கு அதிமுகவினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதனையும் பேரவைத் தலைவா் நீக்கினாா்.

பிறகு, காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினா்களை துரைமுருகன் அமைதிப்படுத்தி, அவை நடவடிக்கையைத் தொடரச் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.