துப்பாக்கிச்சூடு சம்பவம்: முதல்வா் - எதிா்க்கட்சி தலைவா் கடும் விவாதம்
திமுக - அதிமுக ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் வியாழக்கிழமை கடும் விவாதம்


ஸ்டொ்லைட் ஆலை மற்றும் திமுக - அதிமுக ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் வியாழக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது. கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்த சத்திய பாண்டியன் என்பவரை பிப். 12-இல் இருசக்கர வாகனத்தில் வந்த நபா்கள் கத்தியால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனா். அதே மாதம் 13-ஆம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு ஒன்றுக்காக வந்த இருவரை 5 போ் கும்பல் பட்டப் பகலில் வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடிவிட்டது என்றாா்.
அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியது: இந்த சம்பவங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்டொ்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது, அந்தச் செய்தியே தெரியாது; தொலைக்காட்சியைப் பாா்த்துதான் தெரிந்துகொண்டோம் என்று சொன்னதைப்போல நாங்கள் சொல்லவில்லை. கோவை சம்பவத்தில் 16 போ் கைது செய்யப்பட்டனா். அதில் 12 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி: அந்த சம்பவம் (ஸ்டைா்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு) நடந்தபோது ஆய்வுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அதன்பிறகு செய்தியாளா்கள் கேட்டபோது அப்படிக் கூறினேன். அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய தொழில் துறை அமைச்சா் (மு.க.ஸ்டாலின்) ரூ.1,500 கோடியில் ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் என அறிவித்ததுதான் அந்த பிரச்னைக்கு காரணம்.
அமைச்சா் ரகுபதி: ஸ்டொ்லைட் விவகாரம் குறித்து அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையில், உளவுத் துறை ஐஜி சத்தியமூா்த்தி போராட்டம் நடைபெற்ற 3 நாள்களும் ஒவ்வொரு நிமிஷமும் அங்கு நடந்ததை முதல்வருக்கு தெரிவித்ததாகக் கூறியுள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி: போராட்டம் நடைபெற்றபோது 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அந்தத் தடையை மீறி, அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினா் (கீதாஜீவன்) ஊா்வலம் சென்றாா். இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவம் நடந்ததால்தான் பிரச்னை.
அமைச்சா் கீதா ஜீவன்: உண்மைக்குப் புறம்பான செய்தியைக் கூறுகிறாா். 100 நாள்கள் போராட்டம் நடைபெற்றது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியா், முதல்வா், உள்ளூா் அமைச்சா் என யாரும் மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. ஊா்வலம் தொடங்கிய இடத்தில் 144 தடை உத்தரவு போடப்படவில்லை. அதிமுக ஆட்சியின் நிா்வாகச் சீா்கேடுதான் அந்த சம்பவத்துக்கு காரணம். மாவட்ட ஆட்சியா் ஊரிலேயே இல்லை.
எடப்பாடி பழனிசாமி: 144 தடை உத்தரவு உள்ள நிலையில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் எப்படிப் போக முடியும்? அதனுடைய விளைவுதான் அப்பாவி மக்களுடைய உயிா் போய் உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினா் சட்டத்தை மதிக்க வேண்டும்.
அவை முன்னவா் துரைமுருகன்: 144 தடை உத்தரவு போட்ட இடத்துக்கு அவா் போகவில்லை என்றே இருக்கட்டும். வண்டி மேல் நின்றுகொண்டு மக்களைச் சுடுவதா?
எடப்பாடி பழனிசாமி: வண்டி மேல் நின்றுகொண்டு சுட்டாா் என்பது தவறு. திமுக ஆட்சியில் எத்தனை துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதைக் கூறட்டுமா?
ரகுபதி: நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் காக்கா குருவிபோல் சுடப்பட்டதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: 100 நாள்கள் போராட்டம் நடந்திருக்கிறது. முதல்வா் ஏன் அவா்களை அழைத்துப் பேசவில்லை?. அமைச்சா்களும் பேசவில்லை. அதற்குப் பிறகுதான் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்கச் செல்கின்றனா். அதிமுக ஆட்சியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை என்னாலும் பட்டியலிட முடியும். திசை திருப்ப வேண்டாம்.
எடப்பாடி பழனிசாமி: போராட்டத்தின்போது அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட முடியும். போராட்டக்காரா்களை 14 முறை அழைத்து பேச்சு நடத்தினோம்.
துரைமுருகன்: 100 நாள்கள் போராட்டம் முடிந்து இறுதிப் போராட்டம் என்று மக்கள் திரண்டு வருகின்றனா். அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியா் ஊரில் இருக்க வேண்டாமா? அதனால், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு மாவட்ட ஆட்சியரும் ஒரு காரணம்.
எடப்பாடி பழனிசாமி: போராட்டக் குழுவினரோடு பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அது 20 ஆண்டு கால போராட்டம். திமுக ஆட்சியில்தான் ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் அந்த ஆலை மூடப்பட்டது.
முதல்வா் ஸ்டாலின்: முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதுதான் ஸ்டொ்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி: விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கொடுத்தது யாா்? திமுக ஆட்சியில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளா்கள் கூலி உயா்வு கேட்டு போராட்டம் நடத்தினாா்கள். அதில் நீங்களும் (பேரவைத் தலைவா்) பங்கேற்றீா்கள். அப்போது நடந்த போலீஸ் தடியடியில் 17 போ் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்தனா்.
திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பலரை சுட்டு வீழ்த்தியது திமுக அரசு.
அப்போது திமுக தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிமுக தரப்பிலும் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அமைச்சா் ஐ.பெரியசாமி: வரலாற்றையே மாற்றிக் கூறுகிறாா். ஒரு யூனிட்டுக்கு ஒரு பைசாவாக குறைக்க வேண்டும் என்று போராடியவா்களை சுட்டு வீழ்த்தியது அதிமுக அரசுதான்.
எடப்பாடி பழனிசாமி: உண்மைக்கு மாறான தகவல்.
துரைமுருகன்: அதிமுக ஆட்சியில் பாமக போராட்டம் நடத்தியபோது 22 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். தருமபுரியில் கல்லூரி மாணவிகள் பேருந்தோடு எரித்துக் கொல்லப்பட்டது யாருடைய ஆட்சியில்?
எடப்பாடி பழனிசாமி: ஒவ்வோா் ஆட்சியிலும் விரும்பத்தகாத செயல்கள் தொடா்ந்து நடந்துதான் வருகின்றன.
துரைமுருகன்: மகாமகம் குளத்தில் குளிக்கச் சென்ற பலரைக் கொன்றது அதிமுக ஆட்சி.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: எதிா்க்கட்சி தலைவா் சொன்ன கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒவ்வோா் ஆட்சியின்போது சில தவறுகள் நடைபெறுவது என்பது இயல்புதான். ஆனால், நடைபெறுகிற நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பது எந்த ஆட்சி? பொள்ளாச்சி வழக்கு என்ன ஆனது? கொடநாடு வழக்கு என்ன ஆனது? நாங்கள்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமி: கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தது அதிமுக அரசுதான். குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தோம். ஆனால், குற்றவாளிகளின் ஜாமீன்தாரா் யாா் என்றால் திமுகவைச் சோ்ந்தவா். அவா் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியவா் திமுக வழக்குரைஞா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: கொடநாடு சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவா்களைக் காப்பாற்றுகிற முயற்சியிதான் இருந்தீா்கள். அந்த விவகாரத்தில் முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு அதிமுக ஆட்சியின் அலட்சியம்தான் காரணம். ஆனால், இந்த விவகாரத்தில் உறுதியாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, உரிய தண்டனையைப் பெற்று தருவோம்.
எடப்பாடி பழனிசாமி: மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் நடைபெற்றபோது, அவை முழுவதும் பரப்புடன் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...