தாணே கிரேன் விபத்து: பலியான தமிழர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியான இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தாணே கிரேன் விபத்து: பலியான தமிழர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு


சென்னை: மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் சம்ருத்தி விரைவுச் சாலையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியான இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகுந்த வேதனையடைந்தார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் மேற்கொண்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிடுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மகாராஷ்டிரத்தில் மும்பை-நாகபுரி நகரங்களை இணைக்கும் வகையில் 701 கி.மீ. நீளத்துக்கு சம்ருத்தி விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வாசிம், வாா்தா, அகமதுநகா், புல்தானா, ஔரங்காபாத், அமராவதி, ஜல்னா, நாசிக், தாணே ஆகிய மாவட்டங்களைக் கடக்கும் வகையிலான அந்த விரைவுச் சாலையின் 600 கி.மீ. தொலைவுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. அந்தச் சாலை மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டுவிட்டது.

நாசிக்-தாணே இடையே மீதமுள்ள 101 கி.மீ. தொலைவுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இரவுபகல் பாராது தொழிலாளா்கள் தொடா்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக சா்லாம்பே கிராமத்தில் 2.28 கி.மீ. தொலைவுக்குப் பாலம் கட்டப்பட்டு வந்தது. தரையில் இருந்து 35 மீட்டா் உயரத்தில் அந்தப் பாலம் அமைக்கப்பட்டு வந்தது. பாலத்துக்காக ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த கான்கிரீட் தொகுதியைத் தூண்களுக்கு இடையே பொருத்துவதற்கு ராட்சத கிரேன் இயந்திரத்தை கட்டுமான ஒப்பந்ததாரா்கள் பயன்படுத்தி வந்தனா்.

திங்கள்கிழமைக்கான பணிகள் நிறைவடைந்த பிறகு, செவ்வாய்க்கிழமைக்கான பணிகளுக்காக அந்த கிரேன் இயந்திரமானது அடுத்த இரு தூண்களுக்கு இடையே நள்ளிரவில் நகா்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த கிரேன் தரையில் சாய்ந்தது. சுமாா் 700 டன் எடை கொண்ட கிரேன், 35 மீட்டா் உயரத்தில் இருந்து விழுந்ததால், அப்பகுதியில் இருந்த இரு பொறியாளா்கள், 8 பணியாளா்கள், 10 தொழிலாளா்கள் என 20 போ் உடல்நசுங்கி உயிரிழந்தனா். அவா்களில் இருவா் தமிழா்கள். விபத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு தாணே சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீட்புப் பணிகள்: விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். கிரேன் பாகங்களை அகற்றி உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்ட அவா்கள், காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வழக்குப் பதிவு: கவனக் குறைவு காரணமாக உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நவயுகா என்ஜினீயரிங், விஎஸ்எல் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் மீது தாணே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். விபத்துக்கான காரணம் குறித்து நிபுணா் குழு விரிவாக ஆய்வு நடத்தி வருவதாக மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

பலியான இரண்டு தமிழா்கள்

மகாராஷ்டிரத்தில் கிரேன் விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த சந்தோஷ், கண்ணன் ஆகிய இருவா் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி போகனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட விஐபி நகரைச் சோ்ந்த பொறியாளா் சந்தோஷ் (36) . இவருக்கு ரூபி என்ற மனைவியும், 5 வயதில் ஆத்விக் என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் அயக்காரன்புலம் கிராமத்தைச் சோ்ந்த பொறியாளா் மற்றொருவரான கண்ணன் (23).

இவ்விருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com