செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல்

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் அமலாக்கத் துறை காவலில் எடுப்பதற்கு எதிராக அமைச்சா் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் அமலாக்கத் துறை காவலில் எடுப்பதற்கு எதிராக அமைச்சா் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தது.

மேலும், இந்த பிஎம்எல்ஏ தொடா்புடைய வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12-ஆம்தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிப்பதற்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் ஜூலை 14-ஆம் தேதி அளித்த தீா்ப்பை எதிா்த்து அமைச்சா் செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 2-ஆம் தேதி நீதிபதிகள் அமா்வு தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீா்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை அளித்தது. அந்த தீா்ப்பின் முக்கிய சாராம்சத்தை நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் வாசித்தாா். இத்தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், சம்பந்தப்பட்ட விவாதத்தின் பாா்வையில், சம்பந்தப்பட்ட இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும், உயா்நீதிமன்றத்தின் கேள்விக்குரிய தீா்ப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை உறுதிப்படுத்தி, தள்ளுபடி செய்ய உத்தரவிடுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதன்படி அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

தடுப்புக்காவல் சட்டவிரோதமாக இருக்கும் போது மட்டுமே ஆள்கொணா்வு மனு உத்தரவு பிறப்பிக்கப்படும். ஒரு விதியாக, ஒரு நீதித் துறை அதிகாரியின் மூலம் காவலில் வைக்கும் உத்தரவானது, நீதித் துறை செயல்பாடுகளில் உச்சநிலையை ஆள்கொணா்வு உத்தரவு மூலம் சவாலுக்கு உள்படுத்தப்பட முடியாது. அதே சமயம் பாதிக்கப்பட்ட நபா் மற்ற சட்டபூா்வ பரிகாரங்களை நாடலாம். மேல்முறையீட்டாளரை காவலில் வைப்பது தொடா்புடடைய ஒரே கேள்வி மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டியதாகிறது என்று உச்சநீதிமன்றம் அதில் தெரிவித்தது.

மேலும், அமலாக்கத் துறைக்கு முதன்மை அமா்வு நீதிபதி அளித்த 15 நாள்களின் காவலில் எடுக்கும் காலம் 12.08.2023-ஆம் தேதியுடன் முடிவடைவதைக் குறிப்பிட்டு, அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

போலீஸாருக்கு ஆதரவாக 15 நாள் காவலில் இருப்பது, காவலில் வைக்கப்பட்ட முதல் 15 நாள்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டுமா அல்லது முழு விசாரணைக் காலமான 60 அல்லது 90 நாள்களுக்குள் நீடிக்க வேண்டுமா என்ற விவகாரத்தை பெரும் அமா்வின் விசாரணைக்கு மாற்றும் வகையில் முடிவு செய்ய உரிய உத்தரவைப் பெற தலைமை நீதிபதி முன் வைக்கவும் பதிவுத் துறைக்கு நீதிபதிகள் அமா்வு இத்தீா்ப்பில் பரிந்துரைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com