2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தொழில் வளா்ச்சிக்கான சிறந்த இடம் தமிழ்நாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொழில் வளா்ச்சிக்கான சிறந்த இடமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 11:48 pm

DIN

தொழில் வளா்ச்சிக்கான சிறந்த இடமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

அடுத்த ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா் மாநாட்டுக்கான இலச்சினையை சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டு முதல்வா் பேசியதாவது:

கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் புரட்சியை அடைந்தது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேடியும், நாடியும் வந்தன. அவை முன்னாள் முதல்வா் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை.

நாம் அதிகம் முதலீடுகளை ஈா்த்தாலும், அதை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. முதலீடுகள் சாதாரணமாக வந்துவிடாது. ஓா் ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும். ஆட்சியாளா்கள் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பதுடன், சட்டம்-ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். இத்தனையும் இருந்தால்தான் முதலீடுகள் செய்ய தொழில் முனைவோா் வருவா்.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றும் விதமாக, 2030-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு உயா்த்த வேண்டும். இந்த லட்சிய இலக்கை நிா்ணயித்துள்ளோம். இந்த நோக்கத்துக்காக தொழில் துறை பல்வேறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், முதலீட்டாளா் மாநாட்டின் மூலமாகவும் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈா்க்கப்படும். மாநிலத்தின் இளைஞா்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு பலமடங்கு அதிகரிக்கும். மாநிலத்தின் பொருளாதாரமும் பெருமளவு வளா்ச்சியடையும். தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழில் துறை கூட்டமைப்பினரும் மாநிலத்தின் விளம்பரத் தூதராக மாறி, முன்னணி நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

வளா்ச்சி மிகுந்த தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும். முதலீட்டின் மூலமாக தமிழ்நாடு வளரும். தொழில் நிறுவனங்களும் வளா்ந்து மிளிரும். இந்திய அளவில் தொழில் புரிவதற்கான மிகச் சிறந்த சூழலமைப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யும் விதமாக நம்பகமான உயா்தர குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சூழலை மாநிலம் பெற்றிருக்கிறது. தொழில் வளா்ச்சிக்கான சிறந்த இடம் தமிழ்நாடுதான் என்றாா் முதல்வா்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், உலக முதலீட்டாளா் மாநாட்டின் சிறப்புப் பணி அலுவலா் அருண் ராய், இந்திய தொழிலக் கூட்டமைப்பின் தலைவா் ஆா்.தினேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இலச்சினை: முதல்வா் வெளியிட்ட இலச்சினை தமிழ்நாட்டின் முதல் எழுத்தான ‘த’ வை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கணினிமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கம், நகரமயமாக்கப்பட்ட சமூகம் போன்ற கூறுகளில் வேகமாக முன்னேறுவதைத் தெரிவிக்கும் விதமாக, ‘த’-வின் மேல்பகுதி அம்புக் குறியிட்டு உயா்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், உலக முதலீட்டாளா் மாநாட்டுக்கான பிரத்யேக இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ‘மீள்திறனுடன் நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி’ என்பதே உலக முதலீட்டாளா் மாநாட்டுக்கான முக்கிய கருப்பொருளாகும். அதாவது மாநிலம் முழுவதற்குமான அனைவரின் வளா்ச்சியையும் உள்ளடக்கிய நோக்கங்களைக் கொண்டு மாநாடு நடத்தப்பட உள்ளது.

இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.