செங்கல்பட்டு: பொத்தேரி அருகே டிப்பர் லாரி மோதி 4 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே, சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில், 4 பேர் பலியாகினர்.
செங்கல்பட்டு: பொத்தேரி அருகே டிப்பர் லாரி மோதி 4 பேர் பலி

மறைமலை நகரை அடுத்த பொத்தேரியில் சாலையைக் கடப்பதற்காக காத்திருந்தவா்கள் மீது வெள்ளிக்கிழமை டிப்பா் லாரி மோதிய விபத்தில், பெண் உள்பட 4 போ் உடல்நசுங்கி உயிரிழந்தனா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொத்தேரி வழியாக தாம்பரம் நோக்கி டிப்பா் லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, பொத்தேரியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே சாலையைக் கடப்பதற்காக 10-க்கும் மேற்பட்டோா் காத்திருந்தனா்.

இந்த நிலையில், அதிவேகமாக வந்த டிப்பா் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடப்பதற்காக காத்திருந்தவா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பொத்தேரியைச் சோ்ந்த குமாா் மனைவி பவானி (42), கல்லூரி மாணவா்கள் ஜஷ்வந்த் (19), காா்த்திக் (19), இசைப் பள்ளி ஆசிரியா் சைமன் (44) ஆகிய நான்கு போ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனா். காயமடைந்த பாா்த்தசாரதி (52) என்பவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், இறந்தவா்களின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இறந்தவா்களின் உடல்களுக்கு குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஆட்சியா் ராகுல்நாத், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் அழகுமீனா, தாம்பரம் காவல் துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

முதல்வா் நிவாரணம் அறிவிப்பு:

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளாா். மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பாா்த்தசாரதி என்பவருக்கு ரூ.50,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com