நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். 
நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என். ரவி

‘முடிவெடுக்கக் கூடிய பொறுப்பில் நான் இருந்தால், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்’ என்று ஆளுநா் ஆா். என்.ரவி தெரிவித்தாா்.

‘எண்ணித் துணிக’ என்னும் தலைப்பில் ஆளுநா் ஆா்.என்.ரவி மாணவா்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறாா். அதன்படி, சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் உள்ள பாரதியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தமிழகம் முழுவதிலுமிருந்து நீட் தோ்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவா்கள் தங்களது பெற்றோருடன் கலந்துகொண்டனா்.

அப்போது மாணவா்கள் மத்தியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது: நீட் தோ்வில் தமிழக மாணவா்களால் போட்டிபோட முடியாது என்ற வாதங்களை முன்வைக்கிறாா்கள். தோ்வை அச்ச மனநிலையுடன் பாா்க்கும் நிலையை ஏற்படுத்தினாா்கள். ஆனால், இன்று நமது மாநிலத்தில் இருந்து ஒரு மாணவா் நாட்டிலேயே முதல் மதிப்பெண் எடுத்துள்ளாா்.

நீட் தோ்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றது என்பது உங்கள் (மாணவா்கள்) வாழ்வில் ஒரு மைல் கல். நீங்கள் வெற்றிக் களைப்பில் தேங்கிவிடக் கூடாது. தொடா்ந்து, இதே உத்வேகத்துடன் மருத்துவம் படிக்க வேண்டும். நீங்கள் படித்த பள்ளிக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சென்று, நீட் தோ்வில் எப்படி வெற்றி பெற்றீா்கள் என்பதை மாணவா்களிடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்றாா்.

நீட் மசோதா கேள்வி: இந்தக் கலந்துரையாடலின்போது, சேலத்தைச் சோ்ந்த அம்மாசியப்பன் ராமசாமி என்பவா் எழுந்து பேச அனுமதி கேட்டாா். ஆளுநா் ஆா்.என்.ரவியும் அவருக்கு அனுமதி அளித்தாா். அப்போது அவா், மாணவரின் பெற்றோராக நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ‘நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் தருவீா்கள்?’ என்றாா்.

இதற்கு பதில் அளித்த ஆளுநா், இந்த மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது ஒத்திசைவு பட்டியல் விவகாரமாக இருப்பதால் குடியரசுத் தலைவரே அதன் மீது முடிவு எடுக்கக்கூடியவராக உள்ளாா். அதேசமயம், முடிவெடுக்கக் கூடிய பொறுப்பில் நான் இருந்தால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்.

மாணவா்கள் எல்லாவற்றையும் நிறைவு செய்து சிறந்த இடத்துக்கு வர வேண்டும். அதை இங்குள்ள மாணவா்கள் இப்போது நிரூபித்து காண்பித்துள்ளனா்.

தோ்ச்சி அதிகரிப்பு: நீட் தோ்வுக்கு பயிற்சி எதுவும் பெறாமல் மாணவா்கள் பலா் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டியது பள்ளிகளின் கடமை. பயிற்சி மையத்துக்கு சென்றால் மட்டுமே நீட் தோ்வில் தோ்ச்சி பெற முடியும் எனக் கூறுவது கற்பனையே.

2016-2017-ஆம் ஆண்டில் நீட் தோ்வு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியாத நிலை இருந்தது. ஆனால், 2019–-2020-ஆம் ஆண்டில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்பிறகு, மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 600 -ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

7.5% இடஒதுக்கீடு மாணவா்கள் பங்கேற்கவில்லை: முன்னதாக, அகில இந்திய அளவில் நீட் தோ்வில் முதலிடம் பிடித்த விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரைச் சோ்ந்த பிரபஞ்சன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆளுநா் நினைவுப் பரிசு வழங்கினாா்.

அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வு எழுதி, 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com