மகளிர் உரிமைத் தொகை: நாளை முதல் 3 நாள்கள் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் அளிக்காதவர்களுக்காக, நாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் அளிக்காதவர்களுக்காக, நாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது.

மாற்றுத்திறனாளி, ஓய்வூதியம் பெறும் குடும்பத்தின் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில் சிறப்பு முகாம் நாளை நடைபெறவிருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இதுவரை  ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்தால், அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டது. இது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விரிவாக ஆய்வு செய்தார். 

முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்றும் அரசு கருதுகிறது. அதேவேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது என்று முதல்வர் ஆணையிட்டுள்ளார். எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள‌ பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.  இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com