/

போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் சோர்வு அடையக்கூடாது: எல்.முருகன்

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மாணவ, மாணவிகள் எக்காரணம் கொண்டும் சோர்வு அடையாமல், மீண்டும் முயற்சிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 10:34 am

DIN

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மாணவ, மாணவிகள் எக்காரணம் கொண்டும் சோர்வு அடையாமல், மீண்டும் முயற்சிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

திருவள்ளூரில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகியின் குடும்ப திருமண விழாவில் சனிக்கிழமை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று மணமக்களை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தில் திமுக அங்கம் வகிக்கையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய நிலையில் நீட் தேர்வை எதிர்த்து திமுக உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றதாகும். இதுபோன்ற செயல் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் வகையில், திமுக அரசு திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகிறது. 

அதேபோல் போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மாணவ, மாணவிகள் சோர்வு அடையாமல், மீண்டும் முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். தற்போது நடைபெறும் உயிரிழப்புகளை எக்காரணம் கொண்டும் நீட்டுடன் தொடர்புபடுத்தக் கூடாது. பொதுவாக 10 ஆம் வகுப்பு, பிளஸ்2 தேர்வு முடிவுகளின் போது, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வது அந்தக் காலத்திலிருந்து வாடிக்கையாகவே உள்ளது. அது அந்தந்த மாணவர்களின் சூழ்நிலையை பொறுத்து அந்த நேரத்தில் எடுக்கிற தவறான முடிவாகும். இதுபோன்றவைகளை அரசியல் ஆக்கவே கூடாது.

இதற்கு மாணவர்களுக்கு முறையான கலந்தாய்வு கொடுத்து, அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து நீட்டுக்கு தயார் செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தமிழக மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் நீட் தேர்வு வழங்கி உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கும் சூழ்நிலையை இத்தேர்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலன மாணவ, மாணவிகள் கூட மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டுள்ளனர். இதை மாணவ, மாணவிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து மத்திய அரசு சாதனை படைத்தது. இதனால் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது, நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் முதலிடம் பிடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே திமுக அரசு இதை அரசியல் ஆக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திருத்தணி அருகே நல்லாட்டூரில் கோயில் விழாவில் பங்கேற்க சென்றார்.

அப்போது, மாவட்ட தலைவர் அஷ்வின், மாநில ஓபிசி அணி பிரிவு செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மண்டல தலைவர்கள் சதீஷ், பழனி, ரவிக்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகம், முல்லை ஞானம், மகளிரணி அணிச் செயலாளர்கள் சித்ராதேவி, சிவரஞ்சனி, நிர்வாகிகள் பாண்டுரங்கன், பாலாஜி, ரகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.