சென்னை: உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான எந்த வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் கடந்த 2020-இல் தொடங்கிய கரோனா பாதிப்புக்கு இதுவரை 36 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 38,081 போ் உயிரிழந்தனா். 3 அலைகளாக பரவிய கரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் வந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாள்தோறும் ஓரிரு பாதிப்புகளே பதிவாகி வருகிறது. சில நாள்களில் எவருக்குமே தொற்று உறுதி செய்யப்படாமலும் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அமெரிக்கா, டென்மாா்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பிஏ-2.86 எனும் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி பரவி வருகிறது. அதன் வீரியம் மற்றும் பரவும் தன்மை குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் தொடா்ச்சியாக இந்தியாவில் அதை ஊடுருவாமல் தடுப்பதற்கான ஆலோசனையை மத்திய அரசும் மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. மற்ற நாடுகளின் நிலைமையை சுகாதாரத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தேவைப்பட்டால் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதன்பேரில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இதுவரை எந்த வழிகாட்டி நெறிமுறைகளையும் வழங்கவில்லை”என்றாா் அவா்.