பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆளுநர் - அமைச்சரின் உரை இல்லை!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆளுநர் - அமைச்சரின் உரை இல்லை!

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான க.பொன்முடி, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் ஆகியோரும் பங்கேற்றனர்.

உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளரும், பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஆ.கார்த்திக், பல்கலைக்கழகத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டு வரவேற்புரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அவர் பேசும்போது, இளைய தலைமுறையினர் தங்களின் கனவை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மாணவர்களில் 99 சதவீதம் பேர் திறமை இருந்தும் தங்களின் இலக்கு எது என்று தெரியாமல் பயணிக்கின்றனர். ஒரு சதவீதத்தினர் மட்டும் சரியாக இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிச் சென்று வெற்றி பெறுகின்றனர் என்றார்.

இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் 1,382 பேர் பிஎச்.டி பட்டமும், 334 பேர் எம்ஃபில் பட்டமும் பெற்றனர். மேலும், கலை பாடப்பிரிவில் 10 ஆயிரத்து 958 பேர், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் 16 ஆயிரத்து 907 பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் 36 ஆயிரத்து 856, கல்வியியல் பாடப்பிரிவுகளில் 846, வணிகவியல் பிரிவில் 27 ஆயிரத்து 469 பேர் என மொத்தம் 93 ஆயிரத்து 36 மாணவ - மாணவிகள் பட்டம் பெற்றனர்.

ஆளுநர் - அமைச்சரின் உரை இல்லை

கடந்த ஆண்டு நடைபெற்ற 37 ஆவது பட்டமளிப்பு விழாவில் மொழித் திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்தது. கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசு ஹிந்தி மொழியை எந்த மாநிலங்கள் மீதும் திணிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மத்திய அரசு ஹிந்தியைத் திணிப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பொன்முடி, ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பல ஆண்டுகளாக உள்ளது. எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் மீது மற்றொரு மொழியைத் திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். தமிழ்நாட்டில் ஹிந்தி பேசுபவர்கள் பானி பூரிதான் விற்பனை செய்கிறார்கள் என்றார். ஒரே மேடையில் ஆளுநரும், உயர் கல்வித் துறை அமைச்சரும் கொள்கை விவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், ஆளுநர் நீட் போன்ற மசோதாக்களை திருப்பி அனுப்பியது, பொது பாடத்திட்டத்தை பின்பற்றத் தேவையில்லை என்று பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டது போன்ற விவகாரங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில், அதுபற்றி ஆளுநர், அமைச்சரின் உரைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விழா தொடங்கியதும் சிறப்பு விருந்தினர் சஞ்சீவ் சன்யாலை பேச அழைத்த ஆளுநர், அதன் பிறகு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு விழா முடிவடைந்ததாக அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். 

அரசியல் விவகாரங்கள் பட்டமளிப்பு விழா மேடையில் பேசப்படுவதைத் தவிர்க்கவே ஆளுநரும் தனது உரையைத் தவிர்த்து, அதன் மூலம் அமைச்சர் பொன்முடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிட்டார் என்று பேசப்படுகிறது.

இதற்கிடையே பட்டமளிப்பு விழா முடிவடைந்ததும் பட்டம் பெற்ற மாணவ - மாணவிகளுடன், பல்கலைக்கழகத்தின் பெரியார் அரங்கில் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் கடைசி நேரத்தில் மாணவர்களுடனான ஆளுநரின் கலந்துரையாடல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக ஆளுநர் கோவை வந்த விமானம் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக வந்ததால், பட்டமளிப்பு விழாவும் தாமதமாகவே தொடங்கியது. பட்டமளிப்பு விழாவுக்கு பிறகு பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னர் மாலை 3.50 மணியளவில் கோவையில் இருந்து பழனிக்கு கார் மூலம் புறப்பட்டார். பழனியில் சுவாமி தரிசனத்துக்கு பிறகு இரவில் அவர் கோவைக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com