வெறும் தலைப்பைப் பார்த்து பயப்படாதீர்கள் சென்னை மக்களே!

செய்திகளின் தலைப்பை மட்டும் பார்த்து சென்னை மக்கள் பயப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வெறும் தலைப்பைப் பார்த்து பயப்படாதீர்கள் சென்னை மக்களே!

சென்னை: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருக்கிறது என்றும், கனமழை பெய்யும் என வெளியாகும் செய்திகளின் தலைப்பை மட்டும் பார்த்து சென்னை மக்கள் பயப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகி சென்னையை ஒரு உலுக்கு உலுக்கிச் சென்ற மிக்ஜம் புயலின் காயங்கள் இன்னமும் ஆறாத நிலையில், அடுத்த புயல் செய்திகள் நிச்சயம் சென்னை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்தான்.

பலரும், என்ன சென்னைக்கு அடுத்த புயலா என வெறும் தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்து அச்சத்தில் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு, உள் மாவட்டங்களுக்கு தொடர்ந்து மழை இருக்கும். 

சென்னை மக்களே.. அரபிக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை எந்த வகையிலும் பாதிக்காது. வெறும் தலைப்புச் செய்திகளையும் பிரேக்கிங் செய்திகளையும், வாட்ஸ்ஆப்பில் வரும் ஃபார்வர்டு மெசேஜ்களையும் பார்த்து பயப்பட வேண்டாம். இது அரபிக் கடலில்தான் உருவாகியிருக்கிறது. சென்னையை பாதிக்காது என்று விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது என்னவென்றால், தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்  அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.

இதனால், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் சனிக்கிழமை (டிச.9) கன மழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னைக்கு ஆபத்தில்லை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தலைப்புச் செய்தியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது என்பதை மட்டும் பார்த்து சென்னை மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com