ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் படுகாயம்

விழுப்புரத்திலிருந்து ஒகேனக்கல் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பேருந்து கணவாய் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 49 பேர் காயமடைந்தனர்.
ஒகேனக்கல் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து.
ஒகேனக்கல் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து.

 
பென்னாகரம்:
விழுப்புரத்திலிருந்து ஒகேனக்கல் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பேருந்து கணவாய் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 49 பேர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேர் அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் ஓய்வு விழாவை கொண்டாடுவதற்காக, அவருடன் பணிபுரியும் சக மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர்களின் குடும்பத்தினருடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா செல்வவதற்கு முடிவெடுத்துள்ளனர். 

இதையடுத்து கடலூர் பகுதியைச் சேர்ந்த சாய்குமார் என்பவருக்கு சொந்தமான சுற்றுலாப் பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்தப் பேருந்தை விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஸ்ரீநாத் (22), கடலூர் மார்க்கெட் காலனி பகுதியைச் சேர்ந்த உதவியாளர் ராகுல் (23)ஆகிய இருவரும், கடலூர், பாண்டி, விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர்களின் குடும்பத்தினர் என 56 பேரை ஏற்றுக்கொண்டு சனிக்கிழமை ஒகேனக்கல் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒகேனக்கல் கணவாய் பகுதி ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சுற்றுலாப் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, காவல் ஆய்வாளர்கள் சுரேஷ்குமார் (ஒகேனக்கல்), தமிழ்ச்செல்வன் (பென்னாகரம்), காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஒகேனக்கல் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து.

சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 56 பேரில் 49 பேருக்கு மருத்துவ அலுவலர் கனிமொழி தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் படுகாயம் அடைந்த  வைஷ்ணவி (17), சத்யா (30), ராம் பிரசாத் (22), ரோஜிபியா (48), ஜெயனம்மாள், மதன்குமார், ஹன்னா ஆகிய ஏழு பேர் அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

எம்.எல்.ஏ ஆறுதல் :
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்தவர்கள் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாமக கௌரவ தலைவரும் பெண்ணாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான  ஜி.கே.மணி தொலைபேசி வாயிலாக மருத்துவ அலுவலர் கனிமொழியிடம் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தன்மை,அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தும்,காயமடைந்தவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com