மிக்ஜம் கனமழையினைத் தொடர்ந்து களப்பணி: சிவ்தாஸ் மீனா ஆய்வு

மிக்ஜம் மற்றும் கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மிக்ஜம் கனமழையினைத் தொடர்ந்து களப்பணி: சிவ்தாஸ் மீனா ஆய்வு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர், திருவொற்றியூர், மணலி மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் மிக்ஜம் மற்றும் கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-72, கன்னிகாபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணி நடவடிக்கைகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா (டிச.10) பார்வையிட்டு ஆய்வு செய்து. குப்பைகளை அகற்றிடவும், சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கன்னிகாபுரம் ரயில்வே லைன் பகுதியில் உள்ள கால்வாயினைப் பார்வையிட்டு அதில் உள்ள குப்பையினை அகற்றிடவும், கால்வாய் நீர் குடியிருப்புப் பகுதிக்குள் வராத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து,இந்தப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, திருவொற்றியூர் மண்டலம், வார்டு-1, நெட்டுக் குப்பம் மற்றும் எண்ணூர் குப்பம் பகுதியில் உள்ள எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்திருக்கும் எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து நிபுணர் குழு அமைத்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஆறு மற்றும் முகாத்துவாரப் பகுதியில் உள்ள எண்ணெய்ப் படலங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மக்களிடம் தெரிவித்தார். 

தொடர்ச்சியாக, வார்டு 4, எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனிப் பகுதியில் கனமழையின் காரணமாக எண்ணெய்ப் படலம் கலந்த ஆற்றுநீர் குடியிருப்புப் பகுதியில் வரப்பெற்றதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், மணலி மண்டலம், வார்டு-16, சடையங்குப்பம் பாலத்திலிருந்து, கொசஸ்தலையாற்றில் எண்ணெய்ப் படலம் படர்ந்திருப்பதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சடையங்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, அங்கு நடைபெற்ற மழைக்கான சிறப்பு மருத்துவ முகாமினைப் பார்வையிட்டார்.

மேலும், சடையங்குப்பம், இருளர் காலனியில் எண்ணெய் படலம் கலந்த ஆற்றுநீர் குடியிருப்புப் பகுதியில் உட்புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார், தொடர்ந்து, பெருங்குடி மண்டலம், கைவேலி சந்திப்பில் வீராங்கல் ஓடையில் மழைநீர் சீராக செல்வதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வார்டு-189-க்குட்பட்ட துலுக்காத்தம்மன் கோயில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பார்வையிட்டு, அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வார்டு-190, சாய்பாலாஜி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரானது மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவ்விடத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

மேலும், நாளை (11.12.2023) வழக்கம் போல் பள்ளிகள் செயல்படவுள்ள நிலையில் பெருங்குடி மண்டலம், வார்டு-190, பள்ளிக்கரணை சென்னை தொடக்கப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவ்விடத்தில் தூய்மை பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், பல்லாவரம் துரைப்பாக்கம், ரேடியல் சாலையில் உள்ள நாராயணபுரம் ஏரியின் நீர்மட்டத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம்மடுகு கால்வாயில் மழைநீர் சீராகச் செல்வதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com