வெள்ள பாதிப்புக்கு ரூ.1,000 கோடி நிவாரணத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின்

பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்


சென்னை: பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் 21ஆம் தேதி ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அமைச்சர்கள், கே.என்.நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், பி.கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, த.மனோ தங்கராஜ் ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்கள்.

அதேபோல் 10-க்கும் மேற்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த 21.12.2023-ஆம் தேதி அன்று தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழகுவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளுக்குக் கூடுதலாக, அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன. 

அதன் விவரம் பின்வருமாறு;
1. சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்த்தல் – ரூ.385 கோடி 
(அ) திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கும், முழுமையாக கட்டித்தருவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.

(ஆ)    ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை  புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 இலட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 இலட்சம் வரை வழங்குவது எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் முழுவதும் மாநில அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

2. பயிர்ச்சேத நிவாரணம் – ரூ.250 கோடி

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும்.

பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண்ணை அகற்றி விவசாயத்திற்கு ஏற்றவகையில் சீர்செய்துதரும் பணி மாநில வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும்.

3. சிறு வணிகர்களுக்கு ரூ.1 இலட்சம் வரை சிறப்பு கடன் திட்டம் 
பெருமழை காரணமாக சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு, கடன் தேவைகளை நிவர்த்திச் செய்ய இந்த கடன் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4 சதவீத வட்டி, ரூ.1 இலட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். 

4. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ரூ.3 இலட்சம் வரை வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் மூலம் “குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்” என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்படும். 

இந்தத் திட்டத்தின்கீழ், மொத்தம் ரூ.100 கோடி கடனாக வழங்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரை, ஆண்டுக்கு 6% சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இக்கடனை தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன் 18 மாத தவணைகளில்  திருப்பிச் செலுத்தலாம். 

5. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன்

சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் திருப்பம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய நிலையைக் கருத்திற்கொண்டு புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கடன் பெற்றுள்ள சுய உதவிக் குழுக்கள் நிவாரணக் கடன் தவணை மற்றும் வட்டியைத் திருப்பி செலுத்தவதற்கும் அவர்கள் பெற்றுள்ள கடனை மறுசீரமைப்பும் செய்துத்தரப்படும். 

மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர் குழுக் கூட்டத்தில் இதனை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு இந்தத் தருணத்தில் கடன் உதவி மிகவும் அவசியம். மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த மகளிர் 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் அவர்களுக்கு புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு

நிலுவையிலுள்ள கடன் தவணைகளை செலுத்திவதில் கால நீட்டிப்பு குறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழுவில் விரைவில் உரிய முடிவெடுக்கப்படும்.

7. சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் – ரூ.15 கோடி

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாட்டங்களில் 4928 மீன்பிடி படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரணத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்படும். 

8. கால்நடைகள் வாங்குவதற்கு கடன்

பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17,000 கால்நடைகளும் 1 இலட்சத்திற்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4,000 ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்கிட வசிதியாக ரூ.1.50 இலட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.

9. உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை – ரூ.3000

உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரணத் தொகை தலா ரூ.3000 வழங்கப்படும்.

10. பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்குதல்

(அ) மாணவ, மாணவியர்களின் பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் அல்லது சேதமடைந்து இருக்கலாம். அவர்களுக்குப் புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மணவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் பள்ளித் தலைமை ஆசிரியர் / கல்லூரி முதல்வர் மூலமாக புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(ஆ) பாடப் புத்தகங்களை இழந்தவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக வழங்கப்படும். இது பாதிப்புக்குள்ளான அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்.

11.  ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இந்த மழை வெள்ளத்தால் இழந்தவர்கள் புதிய ஆவணத்தை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வரும் திங்கள் கிழமை தோறும் துவங்கப்படும்.

12. வெள்ளத்தால் பழுதடைந்த வாகனங்களுக்கான காப்பீடு:

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காப்பீட்டு நிறுவனங்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும், முகவர்களும் சிறப்பு முகாம்கள் நடத்தி தங்களது சேவைகளை துரிதப்படுத்திட தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வாகன பழுது பார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 3,046 மோட்டார் வாகனங்கள் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு அவற்றில் 917 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,129 வாகனங்களுக்கான பழுதுபார்ப்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com