
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும்போது வெடி வெடித்ததில் 3 தொழிலாளிகள் பலியாகினர், 2 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலங்குளம் அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டும் பணியை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கினார்.
கிணறு வெட்டும் ஒப்பந்த பணியை காலத்திடம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது ஊழியர்களுடன் மேற்கொண்டு வந்தார். கடந்த 10 நாள்களாக மண் பகுதியை தோண்டி எடுத்த தொழிலாளர்கள் வியாழக்கிழமை காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
இதையும் படிக்க | நடிகை அனுஷ்கா அரிய வகை நோயால் அவதியா?
அப்போது எதிர்பாராத விதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த்(21) தொழிலாளி நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார், படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆசிர் சாம்சன் என்ற தொழிலாளியும் உயிரிழந்தார்.
ஆனையப்ப புரத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் (50) 108 ஆம்புலன்சில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.