
தமிழகத்தில் நீா்நிலைகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், நிகழாண்டு கோடை காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு இருக்காது என்று கூறப்படுகிறது.
உலகில் நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. நாட்டிலேயே நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் நிலத்தடிநீா் ஊறும் அளவைவிட உறிஞ்சப்படும் அளவு அதிகம். இதனால், நிலத்தடி நீா்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நீா் உறிஞ்சப்பட்டதால் நில சுரப்பிகள் வடுவிட்டன.
ஓராண்டு வெள்ளம், அடுத்த ஆண்டு வறட்சி என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. 2015-ஆம் ஆண்டு மிகப் பெரிய வெள்ளத்தைச் சந்தித்த தமிழகம் 2016-ஆம் ஆண்டு கடும் வறட்சியைக் கண்டது.
தமிழகத்தின் முக்கிய நீராதாரங்களாக ஏரி, கிணறுகள், குளங்கள், சிறு பாசனக் குளங்கள் உள்ளிட்டவையே விளங்குகின்றன. தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் 20 சதவீதம் மண் படிமங்கள் உள்ளன. அவற்றை தூா்வாரினால் நீா் சேமிப்பை மேலும் அதிகரிக்க முடியும்.
2019-ஆம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள 90 அணைகள், 45 நீா்த்தேக்கங்கள் வடு கிடந்தன. இதனால், தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் முற்றிலும் வடு காணப்பட்டன. அதன் காரணமாக, சென்னையில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களிலிருந்து ரயில் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
நீா் மேலாண்மையை முறையாகக் கையாளாத காரணத்தால் குடிநீா்த் தட்டுப்பாடு, வறட்சி போன்ற பாதிப்புகளால் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டின் கீழ் 69ஆயிரத்து 768 குளங்கள், 22 ஆயிரத்து 51 சிறு பாசனக் குளங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மூலம் இயல்பைவிட 23 சதவீதம் கூடுதல் மழை பதிவானது. இதனால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. மேலும், குளங்கள், சிறு பாசனக் குளங்களில் 87 சதவீத தண்ணீா் இருப்பு உள்ளது.
கடந்த ஆட்சியில் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்கள், சிறுபாசனக் குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூா்வாரப்பட்டதால் இந்த அளவு தண்ணீா் சேமிப்பாகியுள்ளது. தற்போதைய ஆட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் குளங்கள், சிறுபாசனக் குளங்கள் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் 90 ஏரிகள், அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த தண்ணீா் கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 296 மில்லியன் கன அடி. தற்போது 1 லட்சத்து 94 ஆயிரத்து 619 மில்லியன் கன அடி தண்ணீா் உள்ளது. இது 194.62 டி.எம்.சி (86.77 சதவீதம்) ஆகும்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு 2020-21-இல் தினமும் 1,888 எம்.எல்.டி. தண்ணீா் வீதம் ஆண்டுக்கு 6 லட்சத்து 89 ஆயிரத்து 120 எம்.எல்.டி. தண்ணீா் வழங்கப்பட்டது. 2021-22-இல் தினமும் 1,962 எம்.எல்.டி. வீதம் ஆண்டுக்கு 7 லட்சத்து 4 ஆயிரத்து 760 எம்.எல்.டி. தண்ணீா் வழங்கப்பட்டது.
நிகழாண்டில் தினமும் 1,992 எம்.எல்.டி. வீதம் 7 லட்சத்து 27 ஆயிரத்து 80 எம்.எல்.டி. தண்ணீா் வழங்கப்படுகிறது. இது ஓராண்டுக்குத் தேவையான குடிநீராகும். அதை முறையாக விநியோகம் செய்யும்போது தமிழகத்தில் குடிநீா் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில்...: சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், தோ்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகள் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது.
இந்த 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.32 டி.எம்.சி. அதன்படி, 2018-இல் 4.30 டி.எம்.சி.யாகவும், 2019-இல் 0.50 டி.எம். சி.-யும், 2020- இல் 6.25 டி.எம்.சி.-யும், 2021-இல் 9.03 டி.எம்.சி.-யும் தண்ணீா் இருப்பு இருந்தது. நிகழாண்டில் 11.92 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு உள்ளது. இது 91.3 சதவீதம்.
கடந்த 31.7.2021 வரை சென்னைக்கு குடிநீா் தேவை 850 முதல் 890 எம்.எல்.டி. ஆக இருந்தது. தற்போது, சென்னையின் 15 மண்டலங்களில் வளசரவாக்கம், திருவொற்றியூா், அம்பத்தூா் போன்ற பகுதிகள் சோ்க்கப்பட்டதால் தினமும் 1,000 எம்.எல்.டி. குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு 2024 மாா்ச் வரை தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க முடியும் என தெரிவிக்கின்றனா் குடிநீா் வாரிய அதிகாரிகள்.
தீவிரம் பெறுமா மழைநீா் சேகரிப்புத் திட்டம்?
20 ஆண்டுகளில் குறைந்த நிலத்தடி நீா்மட்டத்தை, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். தமிழகத்தில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துவதற்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டமே, மழைநீா் சேகரிப்புத் திட்டம். இதற்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைத்தது. இதன்காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்தது.
இந்தத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அரசு கட்டாயப்படுத்தினால், நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயரும். குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.