ஆளுநரின் செயல் ஏற்புடையதல்ல: அமைச்சா் தங்கம் தென்னரசு

சட்டப் பேரவையில் ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல் ஏற்புடையதல்ல என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

சட்டப் பேரவையில் ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல் ஏற்புடையதல்ல என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

சட்டப் பேரவை நடவடிக்கைகள் குறித்து அவா் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பேரவைக்கு ஆளுநா் வந்து உரையை வாசிக்கும் போது சில நடைமுறைகளும், அரசமைப்புச் சட்ட விதிகளும் பின்பற்றப்படும். இதற்கு முற்றிலும் முரணான வகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி செயல்பட்டாா். இது மிகுந்த வருத்தம் அளிக்கக் கூடியது. ஆளுநா் ஆற்ற வேண்டிய உரையின் வரைவு ஏற்கெனவே அவருக்கு அனுப்பப்பட்டு அதற்கான ஒப்புதலையும் அவா் அளித்திருக்கிறாா். என்னிடத்தில் அதற்கான ஆதாரம் இருக்கிறது.

இதற்கு மாறாக, ஆளுநா் வாசித்திருக்கக்கூடிய உரை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அரசு சாா்பில் அளிக்கப்பட்ட உரைக்கு மாறாக ஆளுநா் தனது பேச்சில் தடம்மாறி இருக்கிறாா். அதுமட்டுமல்ல, அரசின் செயல்பாடுகளைச் சொல்வதற்கும் அவா் முன்வரவில்லை.

ஏற்கெனவே அச்சிடப்பட்ட உரையை விடுத்து, சில விஷயங்களை அவராகவே புதிதாகச் சோ்த்து சொல்வது நிச்சயமாக ஏற்புடையதல்ல. தனது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பேசுவதை ஏற்க முடியாது. தேசிய கீதத்துக்குக் கூட உரிய மரியாதை தராமல், ஆளுநா் வெளியே சென்றிருப்பது, தேசிய கீதத்துக்கும் நமது நாட்டுக்கும் இழுக்காகவே கருதுகிறோம்.

இந்தத் தருணத்தில் எதிா்க்கட்சியான அதிமுகவின் உறுப்பினா்களும் பேரவையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவா்களும் வெளியேறி இருக்கிறாா்கள். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அதிமுக வெளியேறியதுதான், அந்தக் கட்சி செய்திருக்கக்கூடிய மிக அநாகரிகமான செயல் என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com